மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின் சூர்ய வம்சத்து அரசன் பகீரதனால் தேவலோகத்திலிருந்து பூமிக்கு கங்கை வந்த நாளையே கங்கா தசரா பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இப்பண்டிகை வைகாசி மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு நடைபெறும். தசரா என்பதை தஸ் + ஹரா என்று பிரித்து உணர வேண்டும். அதாவது, ஹிந்தியில் தஸ் என்பது பத்தையும், ஹரா என்பது தீமையையும் குறிக்கும்.
வேதாந்த ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பத்து வித பெருமைகள் உண்டு இந்த நாளுக்கு. அதாவது, வைகாசி மாதம், சுக்ல பட்சம், பத்தாம் நாள், புதன் கிழமை, ஹஸ்த நட்சத்திரம், வியதீபாத யோகம், கர் ஆனந்த் யோகம், சந்திரன் கன்னி ராசியில் இருக்க, சூரியன் ரிஷபத்தில் இந்த பத்துவித அமைப்பும் இருக்கும் வேளையில் தேவலோகத்திலிருந்து கங்கை இந்த பாரத புண்ணிய பூமியில் பிரவாகித்தாள். ஆதலால்தான் கங்கையில் குளிக்கும்போது நாம் செய்யும் பத்து வகை பாபங்களும் விலகுகின்றன. அந்த பத்து வகை பாபங்களும் மனோ, வாக்கு, காயம் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
நம்மால் முடிந்தவரையில் இந்த பத்துவித பாபங்களையும் செய்யாதிருத்தல் நல்லது. நம்மையும் மீறி இந்த பாபங்களைச் செய்து விட்டால், அதைப் போக்கிக்கொள்ள கங்கையில் நீராடி, மனதளவில் தாம் செய்த பாபங்களை நினைத்து வருந்தினால் அந்தப் பாபங்கள் நீங்கும். தவிர, மீண்டும் இத்தகைய பாவங்களைச் செய்யக் கூடாது. இது மிக முக்கியம். கங்கா தசராவின் முக்கிய அம்சம்.