புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெ ட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற் சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் கொண்டாடப்படுகிறது.