சேர மன்னன் மகளின் வயிற்றுவலியை குணமாக்கிய அப்பன் திருப்பதி.. ஏழுமலையானுக்கு இணையானவர்..!

Mahendran

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (19:00 IST)
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ளது அப்பன் வெங்கடாசலபதி கோயில். விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர், திருப்பதி ஏழுமலையானுக்கு இணையாக வணங்கப்படுகிறார்.
 
இக்கோயிலின் தல வரலாற்றின்படி, சேர மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத வயிற்று வலி, இங்கு கோயில் கொண்டிருக்கும் அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி, மிளகு ரசப் பிரசாதம் அளித்த பின் குணமானது. இதனால், இந்த கோயிலின் மிளகு ரசப் பிரசாதம் நோய் தீர்க்கும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி சுவாமியைத் தரிசித்தால் தீராத நோய்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். நோய் குணமாக பெற்றவர்கள், மிளகு பொங்கலை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். மேலும், குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியர், திருவோண நட்சத்திரத்தன்று பாயசம் படைத்துத் தொடர்ந்து 9 மாதங்கள் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு.
 
கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் ஜடாவர்மனின் கல்வெட்டுகள் உட்பட சுமார் 60 பழங்காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. புரட்டாசி பிரம்மோற்சவம் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்