திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவதாக வராக அவதாரம் இடம்பெற்றுள்ளது. மனித உடலும் பன்றி முகமுமாக தோன்றிய இவர், பூமியைக் கடலுக்குள் அழைத்து போன இரண்யாட்சனை வீழ்த்தி மீட்டதற்காக வராகமூர்த்தியாக போற்றப்படுகிறார்.
வராகர், ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என மூன்று முக்கிய ரூபங்களில் வணங்கப்படுகிறார். பூமி தேவியுடன் ஒரே திருமேனியில் தோன்றி அருள்பாலிப்பதால், லட்சுமி வராகர் என்றும், இடப்பக்கத்தில் பூதேவியைக் கொண்டு நின்றிருப்பதால் இடஎந்தை பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். தினமும் ஒரு கன்னியை திருமணம் செய்யும் தன்மை காரணமாக இவருக்கு "நித்ய கல்யாணப் பெருமாள்" என்றொரு சிறப்பு பெயரும் உண்டு.
மாமல்லபுரம், திருவிடந்தை, ஸ்ரீமுஷ்ணம், காஞ்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இவருக்கென தனி சந்நிதிகள் உள்ளன. நிலம் சம்பந்தமான பிரச்சனைகள், கடன் சுமைகள் தீர வேண்டி பக்தர்கள் வராகரை வணங்குவார்கள்.