சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்தக் குழந்தைகள் ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவ என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். எனவே வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.
துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.