சிவபெருமானை வழிபட உகந்ததாக திங்கட்கிழமை கருதப்படுவது ஏன்...?

திங்கள், 6 ஜூன் 2022 (13:22 IST)
திங்கட்கிழமை அன்று, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். இந்த நாளை ‘சோமவாரம்’ என்றும் அழைப்பார்கள். ‘சோம’ என்பது சந்திரனைக் குறிப்பதாகும். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை தினத்தில் சிவபெருமானை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.


ஒரு முறை சாபத்தால், தேய்ந்துகொண்டே சென்ற சந்திரன், தன்னுடைய சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தான். இதையடுத்து தன்னுடைய சடைமுடி மீது சந்திரனை சூடிக்கொண்ட சிவன், அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். சந்திரனின் சாபம் நீங்க, அவனது மனைவி ரோகிணியும் இந்த விரதத்தை மேற்கொண்டாள். இந்த சோமவார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் கிடைப்பதுடன், கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் விலகும்.

ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் சிவபெருமான், தானே வெற்றிபெற்றதாக கூறினார். இதனால் கோபமடைந்த பார்வதி, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவரை அழைத்து நியாயம் கேட்டார். அதற்கு அந்த முனிவர், ‘ஆட்டத்தைப் பார்க்காமல் தீர்ப்பு கூற முடியாது’ என்று சொல்ல, பார்வதியும் சிவனும் மீண்டும் விளையாடினர். அப்போதும் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் முனிவரும் கூட ‘சிவபெருமானே வெற்றிபெற்றார்’ என்று சொன்னார்.

இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி தேவி, துர்க்கையாக மாறி முனிவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் தொழு நோய் பாதிக்கப்பட்டு முனிவர் அவதிப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்தார். அப்போது ஒரு பெண், முனிவரை தடுத்து நிறுத்தினாள். அவரது கதையைக் கேட்டவள், பின்னர் “நான் ஒரு தேவலோகப் பெண்.

இந்திரனின் சாபத்தால், பூலோகத்தில் பிறந்தேன். இங்கு சோமவார விரதத்தை மேற்கொண்டதால் எனக்கு விமோசனம் கிடைத்து, தற்போது தேவலோகம் சென்று கொண்டிருக்கிறேன். நீங்களும் சோம வார விரதம் மேற்கொண்டால், உங்களுடைய சாபமும் நீங்கும்” என்று கூறிச் சென்றாள். அதன்படி முனிவரும் விரதம் மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்