சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது.
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது.
காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.