உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி: கட்ட துரையை கட்டம் கட்டிய கட்டபொம்மன்!
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (16:44 IST)
ஆங்கிலேயரின் பிடியில் இருந்த இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலைகான தீயை எண்ணெய் ஊற்றி எரிய வைத்துவிட்டு போனவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டின் பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன். புதுக்கோட்டை மன்னரின் படைகளால் வீரபாண்டிய கட்டபொம்மன் பிடிக்கப்பட்ட போது தனது உயிரை துறக்க முன்வந்த அஞ்சாத சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன். இதனால் அவரது கைகளை கட்டிதான் கொண்டு வந்தார்கள்.
ஆங்கிலேயருக்கு கிஸ்தி செலுத்தவில்லை (வரி), ஆங்கிலேய கலெக்டர் விதித்த உத்தரவுகளுக்கு சரியான பதில்கள் தரவில்லை. தன்னை வந்து பார்க்க சொன்ன கலெக்டரின் உத்தரவை துளியும் மதிக்காமல் இருந்தார். தானியக்கிடங்கை கொள்ளையடித்தவரை ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்தது. தன்னுடைய ராணுவ நடவடிக்கையால் ஆங்கிலேயே படையின் அதிகாரிகள் பலரின் கொலைக்கு கட்ட பொம்மன் காரணமாக இருந்தார். இவை தான் கட்டபொம்மன் மீது ஆங்கிலேயர் வைத்த குற்றச்சாட்டு.
இதற்கு கட்டபொம்மன் அளித்த பதில்கள், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எவருக்கும், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எப்பொழுதும் அவருக்கு கிஸ்தி செலுத்த வேண்டும் என்று நினைக்கவே இயலாது. ஆகவே நான் கிஸ்தி செலுத்த மறத்தேன் என்றார்.
கலெக்டர் அலுவலகத்திலே வந்து கலெக்டரைப் பார்ப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்ற உத்திரவினால் நான் மிகுந்த சினங் கொண்டேன். நான் கலெக்டரின் சொந்தப் பணியாளர் அல்ல என்றார் சினம் கொண்ட சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
காட்டிக்கொடுப்பது என்னால் முடியாத காரியம் திருவைகுண்டத்தில். அதே நேரம் ஆங்கிலேயரின் தானியக்கிடங்கை கொள்ளையடித்தது சரியான காரியமல்ல. ஆனால் மழை பெய்யாமல் கடுமையான வறட்சியால் மக்கள் இருக்கும் போது யாருக்கும் தானியம் கிடைக்காமல் இருக்கும் போது தானியக் கிடங்கை திறந்து மக்களை அங்கிருக்கும் தானியங்களை எடுத்துச் செல்ல அவர் அனுமதித்திருந்தார்.
என்னுடைய அனுமதி இல்லாமல் இந்தக் காரியத்தை செய்ததற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் ஆங்கிலேயரால் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்று என்னுடைய பாதுகாப்பையும் நாடினார். நான் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினேன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒரு மனிதனை காட்டிக் கொடுப்பது என்னால் முடியாத காரணம்.
அதற்கு பதிலாக கொள்ளையடிக்கப்பட்ட தானியங்களுக்கான 3300 ரூபாயுடன் அபராத ரூபாயையும் சேர்த்து நான் கொடுப்பதற்கு முன் வந்தேன். ஆனால் ஆங்கிலேயர்கள் அதனை ஏற்கவில்லை என்றார் கட்டபொம்மன். தவறு செய்தாலும் அதனை ஒப்புக்கொண்டு தன்மானத்துடன் அதற்கான பரிகாரத்தை செய்ய முன்வந்திருக்கிறார் கட்டபொம்மன்.
பண்பும் சுயமரியாதையும் மிக்க வீரபாண்டிய கட்டபொம்மனை உயிருடன் பிடிப்பதற்காக அவரது தலைக்கு ஒரு விலையை நிர்ணயித்து. புதுக்கோட்டை தொண்டைமான், எட்டயபுரம் பாளையக்காரர்களுக்கு ஆசையை தூண்டி காட்டிக்கொடுக்க வைத்தீர்கள் என தன்னை காட்டிகொடுத்தவர்களை எதிரியாக நினைக்காமல் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வீழ்ந்தவர்கள் என உண்மையை சரியாக புரிந்துகொள்ளும் தன்னிகரல்லா தலைவன் கட்டபொம்மன்.
1799-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16-ஆம் தேதி கயத்தாறில் தூக்கிலப்பட்டார். 39 வயதே ஆன வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிரற்ற உடலை பார்த்து ஆண்களும் பெண்களும் அழுது கொண்டிருந்தனர். அனைவரது தலையும் வணங்க அவரது உடலுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. அன்று மூண்ட தீ, 150 ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயரை அழிக்கும் சுதந்திரத் தீபமாக ஜொலித்தது.