வெப்பத்தாக்கத்தை ஏற்படுத்தும் வெப்பவாயுக்களின் தேக்க அளவு விண்வெளி மண்டலத்தில் பயங்கரமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் புவி வெப்பமடைதல் செயல்பாடுகள் மந்தமடைவதற்கான சுவடுகள் கூட இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. வானிலை அமைப்பின் சமீபத்திய வெளியீட்டின் படி 3 மிக அபாயகரமான வெப்பவாயுக்களின் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அவை அதிகரிக்கும் விகிதமும் குறைந்தபாடில்லை என்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வாரம் உலகத் தலைவர்கள் ஒன்று கூடுகையில் விஞ்ஞானிகள் தங்களது புதிய தரவுகளை வெளியிடவுள்ளனர்.
கோபந்கேகன் மாநாட்டில் நிர்ணையிக்கப்பட்ட வெப்பவாயு வெளியேற்ற குறைப்பு விகிதம் எந்த வகையிலும் புவிவெப்பமடைதல் வேகத்திற்கு இணையாக இருக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
"வெப்பவாயு வெளியேற்ற வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது அச்சுறுத்தும் விகிதமாகும் என்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் உளக கண்காணிப்புப் பிரிவின் இயக்குனர் ஜிம் பட்லர் எச்சரித்துள்ளார்.
வெப்பவாயுக்கள் எந்த அளவுக்கு இருந்தால் பாதுகாப்பானது என்பதை விஞ்ஞானிகள் இன்னமும் கணிக்கவில்லை. ஆனால் அதிகரிக்கும் வெப்பவாயுத் தேக்கத்தினால் புவி வெப்பம் அதிகரித்து துருவப்பனிகளை உருக்கிவிட்டால் கடல் மட்டம் இந்த நூற்றாண்டில் பல அடிகள் உயரும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க எரிசக்தித் துறை உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றம் 2010ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இது ஒரு ஆண்டில் அதிகரிக்கும் அளவில் அதிகபட்சமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
தொழிற்புரட்சி தொடங்கியதாகக் கருதப்படும் 1750ஆம் ஆண்டு இருந்தததை விட விண்வெளியில் கரியமிலவாயுவின் அளவு 2010ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 109 பகுதி அதிகரித்துள்ளது என்று கூறுகின்றனர். ஆண்டொன்றிற்கு 2.3 பகுதிகள் சீராக அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெட்ரோல், டீசல் எரிப்பு, காடுகளின் இழப்பு மற்றும் உரங்களின் உபயோகம் அதிகரிப்பே இதற்கான காரணம் என்று ஐ.நா. வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
1990ஆம் ஆண்டு வானிலை பேச்சுவார்த்தைகளின் போது வெப்பவாயு வெளியேற்றத்திற்கான உச்ச அளவு நிர்ணயிக்கப்பட்டு தேசங்கள் அதற்கு ஒப்புக் கொண்ட பிறகு இன்று வரை 29% வெப்பவாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளது.
1997ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் போடப்ப்ட்ட பிறகும் கூட வெளியேற்றம் குறைந்தபாடில்லை. சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில் புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகியுள்ளன. ஒப்பந்தத்தில் இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்பதால் வெப்பவாயு வெளியேற்றத்தில் குறைப்பு செய்யவேண்டியதில்லை என்ற முடிவு எட்டப்பட்டது.