காஜிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகம் சுட்டுக்கொலை

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (17:51 IST)
காண்டாமிருகத்தின் கொம்பிற்காக அதனை சமூக விரோத சக்திகள் வேட்டையாடுவது பெருகி வருகிறது. உலகிலேயே காண்டா மிருகங்கள் அதிகம் வாழும் அசாம் மாநிலத்தின் காஜிரங்கா தேசியப் பூங்காவில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பெண் காண்டா மிருகம் சுட்டுக்கொல்லப்பட்டது வன அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்துடன் இந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ள காண்டாமிருகத்தின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 430 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு உள்ள காஜிரங்கா தேசியப் பூங்காவில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு துப்பாஅக்கிச் சுடும் சப்தம் கேட்டது.

உடனே வனப்பாதுகாப்புக் காவலர்கள் திருப்பிச் சுட்டனர். ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. மாறாக வேட்டையாளர்கள் காண்டாமிருகத்தின் கொம்புடன் தப்பிச் சென்றனர்.

வனக்காவலர்கள் பூங்கா அதிகாரிகளுக்கு இந்தத் தக்வலைத் தெரிவித்தனர். இதனையடுத்து தேடுதல் நடத்தியபோது கொல்லப்பட்ட காண்டாமிருகத்தின் உடல் அங்கு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளச் சந்தையில் ஆப்பிரிக்க காண்டா மிருகங்களின் கொம்புகளைக் காட்டிலும் இந்திய காண்டா மிருகங்களின் கொம்புகளுக்கு விலை அதிகம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய காண்டா மிருகத்தின் கொம்பு கிலோ ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை விற்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு கிராக்கி அதிகம்.

காஜிரங்கா தேசியப் பூங்கா மற்றும் குவஹாட்டி அருகே உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் உள்ள காண்டாமிருகங்களை வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

உலகத்தில் உள்ள மொத்த 2,700 காண்டாமிருகங்களில் உலகப் புகழ் பெற்ற காஜிரங்கா தேசியப்பூங்காவில் மட்டும் 1,855 காண்டா மிருகங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்