இயற்கையின் சீற்றத்தால் ஆண்டுக்கு 4,334 பேர் சாகின்றனர்

திங்கள், 7 நவம்பர் 2011 (15:23 IST)
மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கும் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 4,334 பேர் உயிரிழக்கின்றனர் என்றும், இயற்கைப் பேரிடரால் ஆண்டுக்கு 86,000 கோடி ரூபாய் நட்டமேற்படுகிறது என்றும் ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்டங்கள் அமைப்பு கூறியுள்ளது.

திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டங்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்றுவரும் மாநாட்டில், அவ்வமைப்பின் இந்தியப் பிரிவுத் தலைவர் ஜே.இராதாகிருஷ்ணன், இயற்கையாலும், மனிதர்களினாலும் ஏற்படும் பேரிடர்களுக்கு எதிரான வலிமையான பாதுகாப்புக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இந்தியா மிக பலவீனமான நாடாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மொத்த நிலப் பகுதியில் 58.6 விழுக்காடு மிதமானது முதல் கடும் நிலநடுக்க ஆபத்து உள்ள பகுதியாக இருக்கிறது. 12 விழுக்காடு விளைநிலங்கள் - அதாவது 4 கோடி ஹெக்டேர் நிலம் வெள்ளத்தினாலும், ஆற்று அரிப்பாலும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

இந்தியாவின் மொத்த கடற்கரையான 7,516 கி.மீ. தூரத்தில் 5,700 கி.மீ. தூரம் புயல், ஆழிப் பேரலைத் தாக்குதலிற்கு உள்ளாகும் பகுதியாக இருக்கிறது. 70 விழுக்காடு பயிர் செய்யக் கூடிய நிலப்பரப்பு வறட்சிக்கும், பெரும் பகுதி மலைப் பகுதிகள் நிலச் சரிவிற்கும், பனிச் சரிவிற்கும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதியாகவுள்ளது.

இந்த அளவிற்கு இயற்கை அச்சுறுத்தல் இருந்தும், அதில் இருந்த காப்பாற்றிக்கொள்ளும் அமைப்புகள் பலமானதாக இல்லாததிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.86,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு 4,334 பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் சாகிறார்கள் என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி, இரசாயண, உயிரியல், கதிர்வீச்சு, அணு சக்தி ஆகியவற்றின் காரணமாகவும் பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்று ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நகர மக்கள் தொகை, நகரங்களின் வளர்ச்சி, தொழில்மயம், மேம்பாடு, ஆபத்தான பகுதிகளின் விரிவாக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வானிலை மாற்றம் ஆகியன இந்த அளவிற்கு பேரழிவிற்கு காரணமாக இருக்கின்றன என்று ஐ.நா.கூறியுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்ற தேச இயற்கை பேரிடர் ஆளுமைக் கழகத்தின் பேராசியர் சந்தன் கோஷ், பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பான்மையினர் பொருளாதார, சமூக ரீதியாக பலவீனமான மக்களும், அவர்களில் பெண்களும் சிறுவர்களுமே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 8 விழுக்காடு வளர்ச்சியடைகிறது என்று பீற்றும் மத்திய அரசுதான் இதற்கு பதில் கூற வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்