இந்திய, சீன நதிகளைக் காப்பாற்றும் திபெத் பனிமலைகள் அதிவேகமாக உருகிவருகிறது

திங்கள், 24 அக்டோபர் 2011 (15:05 IST)
குவிங்காய்-திபெத் பனிமுகடுகள் மிகவேகமாக உருகி வருவதாக சீன ஆய்வாளர்களின் 5 ஆண்டுகால ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டம் மற்றும் சீனாவின் பெரும் நதிகளைக் காக்கும் இந்தப் பனிமலைகள் எப்போதையும் விட அதிவேக அளவில் உருகிவருவதாக இந்த ஆய்வு அதிர்ச்சியளித்துள்ளது.

அதிகப்படியான பனிமுகடுகள் சுமார் 2,400 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு உருகியுள்ளது. யாங்சே, மஞ்சள் நதி, லாங்சாங் நதி ஆகியவற்றின் ஈரநிலங்களையும், தலைமைப் பிறப்பிடங்களையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

யாங்சே நதியின் ஊற்றுக்கண் பகுதியில் சுமார் 70 சதுர கிமி பரப்பளவிலான பனி உருகியுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும் குறிப்பாக கடந்த ஆண்டு, இதற்கு முந்தைய 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துள்ளதாகவும் மூத்த ஆய்வாளர் செங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

அதேபோல் லாங்செங் நதியின் ஊற்றுக்கண் பகுதியில் உள்ள 70% பனிமுகடுகள் உருகிவிட்டது. மஞ்சல் நதியின் ஊற்றுக்கண் பகுதியில் 80% பனிச்சிகரங்கள் சுருங்கி விட்டதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிமலைகள் பனியற்ற பிரதேசமாக மாறிவிட்டால் நதிகள் வறண்டு தண்ணீர்ப் பற்றாக்குறையை கடுமையாக எதிர்கொள்ளவேண்டி வரும் என்று இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குவிங்காய்-திபெத் பகுதிகளில் நிறைய ஏரிகள் உருவாகி வருவதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் இப்பகுதியில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாலும் புவி வெப்பமடைதல் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகக் கருதுகின்றனர்.

சிந்து, மற்றும் கங்கை நதிகள் இதனால் பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்