போபால் விஷவாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 346 மெட்ரிக் டன்கள் நச்சுப் பொருளை அப்புறப்படுத்தி எரிக்க ரூ.30 கோடி செலவழிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போபாலிலிருந்து இந்த நச்சுப் பொருட்கள் நாக்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நச்சுப்பொருள் எரிப்பு ஆலைக்குக் கொண்டு வரப்படுகிறது.
"இந்த நச்சுப்பொருட்கள் சுமார் 346 மெட்ரிக் டனக்ள் உள்ளது. இது தற்போது யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பாதுகாப்பான குடோனில் வைக்கப்பட்டுள்ளது. டீ.ஆர்.டி.ஓ. இந்த நச்சுப்பொருட்களை அழிக்க ஒப்புக் கொண்டுள்ளது" என்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூசல் அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
"இந்த நச்சுப் பொருளை போபாலிலிருந்து டீ.ஆர்.டி.ஓ. இடத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யும் பொறுப்பு மத்திய பிரதேச மாநில அரசின் கையில் உள்ளது" என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி யூனியன் கார்பைடு விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.
இது குறித்த வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் மத்திய பிரதேச அரசு நச்சுப் பொருளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை இன்னமும் மேற்கொள்ளவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.