நாம் வாழும் இந்த பூமியில் இன்னும் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன என்ற கேள்விக்கு விடை தேடும் பணியில் விஞ்ஞானிகள் காலங்காலமாக ஈடுபட்டு வந்ததன் பயனாக தற்போது உலகில் 87 லட்சம் உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை ஒரு உத்தேச மதிப்பீடுதான் என்றாலும் இது கறாரான ஒரு கணித முறை ஆய்வின் படி நடத்தப்பட்டு எட்டப்பட்ட முடிவாகும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இன்னும் சில கடல்வாழ், நில வாழ் உயிரினங்கள் பற்றி முழுதும் எதுவும் கூற முடியவில்லை என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
இன்னும் 86% நிலம் வாழ் உயிரினங்களையும், 91% நீர் வாழ் உயிரினங்களையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பி.எல்.ஓ.எஸ். பயாலஜி என்ற பத்திரிக்கையில் வந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த பூமியிலிருந்து இந்த உயிரினங்கள் முற்றிலும் அழியும் முன்பாக அதன் எண்ணிக்கையை அறிவதும், அதனால் இந்த பூமிக்கு என்ன பயன், மனித குலத்திற்கு என்ன பயன் என்பதை ஆய்வு செய்வது முக்கியமானதாகும் என்று இந்த ஆய்வில் பங்கேற்ற உயிரியல் பேராசிரியர் போரிஸ் வோர்ம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பூமியின் அதிசயங்களை வெளிக்கொணர வெளிக்கொணர மக்கள் இதன் மீதான வாழ்க்கை என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள உதவ முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில பல உயிரினங்களின் மருத்துவப் பயன்கள், சுற்றுச்சூழல் பயன்கள் எண்ணற்றவை என்று மற்றொரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பூவுலகில் 30 லட்சம் முதல் 10 கோடி உயிரினங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவற்றை எண்ணிக்கையில் வெளியிடுவது கடினம் என்று அந்தப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களின் எண்ணிக்கையான 87 லட்சம் உயிரினங்களில் 65 லட்சம் உயிரினங்கள் நிலம் வாழ் உயிரினங்கள் என்றும் மீதமுள்ளவை கடல்வாழ் உயிரினங்கள் என்றும் கருதப்படுகிறது.
மேலும் சுமார் 78 லட்சம் உயிரினங்கள் விலங்குகள் வகையினத்தைச் சேர்ந்தவை என்றும் 6,11,000 காளான் வகையைச் சேர்ந்தவை என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பிற தாவரங்கள் 3 லட்சம் வரையில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் 87 லட்சம் உயிரினங்கள் என்பது மிகவும் குறைவான மதிப்பீடே என்றும் வேறு சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்கள் எண்ணிக்கை 19 லட்சமே. இதில் 12 லட்சம் உயிரினங்கள் பெயர்கள்தான் ஆன்லைன் உயிரினங்கள் களஞ்சியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.