வளர்ச்சி என்ற பெயரில் சீனாவின் எல்லை மீறிய கனிமவளத் தோண்டுதல், காடுகள் அழிப்பு, விஞ்ஞானபூர்வமற்ற நெடுஞ்சாலை கட்டுமானங்கள், ரெயில்வே கட்டுமானங்கள் ஆகியவற்றினால் திபெத் சுற்றுச்சூழல் ரீதியாக அழிந்து வருகிறது என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
"திபெத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை மனித உற்பத்தி நடவடிக்கைகள் நாசமாக்கி வருகிறது" என்று திபெத் சுற்றுசூழல் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
திபெத்தில் மட்டும் வெப்ப நிலை அதிகரிப்பு உலக அளவில் சராசரியாக வெப்ப நிலை உயர்வதைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உறைபனி அளவு குறைதலும் வானிலை மாற்றங்களின் மோசமான விளைவுகளையும் திபெத் மட்டுமல்லாது உலகம் முழுதுமே எதிர்கொள்ளவேண்டி வரும் என்று இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
திபெத்தின் பெரும்பகுதி புல்நிலவெளிகள் அழிந்து வருகிறது. இதற்கான காரணத்தை அங்கு வாழும் நாடோடிகளின் வாழ்க்கையை சீனா குறைகூற திபெத் ஆய்வோ சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளே காரணம் என்று கூறியுள்ளது.
இதனால் சுரண்டல் அல்லாத பகுதியாக திபெத்தை அறிவிக்கவேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையை புகலிடத்தில் வாழும் திபெத் பிரதமர் லோப்சாங் சாஙாய் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து டிபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் கவலை வெளியிட்டுள்ளார். "புவி வெப்பமடைதல் ஒரு பெரிய கவலை தரும் விஷயமாகும். திபெத் ஏற்கனவே அதன் தாக்கத்தினை அனுபவித்து வருகிறது.
இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமானது ஆனால் இதன் தன்மையை ஒருவரும் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. திபெத்திலும், இமாலயப் பகுதியிலும் பனிமலைகல் உருகி வருகின்றன. இதனால் உலக நாடுகள் உண்மையான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
திபெத்தில் முன்பெல்லாம் விலங்குகள் பெரிய அளவில் இருந்துவந்தன. தற்போது அருகி வருகின்றன. காடுகள் அழிப்பு விலங்குகளின் அழிவு துக்ககரமானது. இதனால் இந்த இடத்தின் அழகு போய்விட்டது என்பதும், உள்ளூர்வாசிகளுக்கு எரிப்பதற்கான மரம் கூட இங்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா என்று ஆசியாவின் பல பகுதிகள் ஊடாகச் செல்லும் மஞ்சல் நதி, பிரம்மபுத்திரா, யாங்சே, சல்வீன், மேகாங் ஆகிய நதிகள் அப்பகுதிகளில் நடத்தப்படும் சுரங்கம் தோண்டுதல் மற்றும் கனிம வளச்சுரண்டல்களால் மாசு படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீன புள்ளிவிவரங்களின் படி திபெத்தில் சுமார் 126 பல்வேறு பட்ட கனிமவளங்கள் உள்ளன. இதனை சீனா தெரிந்து கொண்டவுடன் எந்த வித பாதுகாப்பு உணர்வுமின்றி சுரங்க நடவடிக்கைகளை ராடசதத் தனமாகத் துவங்கியது சீனா. இதனால் திபெத்தின் தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது." என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.