ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
புதன், 10 நவம்பர் 2010 (13:19 IST)
ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்ற வருவோர், விசா முடிந்த நிலையில், தங்கள் பணி நீட்டிப்பிற்காக காத்திருக்கும்போது அவர்களை கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ அல்லது அவர்களின் நாட்டிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்பவோ கூடாது என்று கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு மனித உரிமை அமைப்பு ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
அமெரிக்க குடியேற்றப் பேரவையின் சட்ட நடவடிக்கை மையமும், அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து கனக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்களிடம் பணியாற்றும் அயல் நாட்டுப் பணியாளர்களின் பணிக்காலத்தை நீட்டித்து தருமாறு அவர்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், அந்த பணியாளர்களை விசா முடிந்துவிட்டு என்கிற காரணத்திற்காக கைது செய்வது, சிறையில் அடைப்பது, அவர்களின் நாட்டிற்கு கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் நியாயமானதல்ல என்று கூறியுள்ளது.
தனது பணியாளர்களின் விசா நீட்டிப்பை கோரும் நிறுவனங்களின் விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. அதை நிறைவேற்றத் தவறும்போது அதற்காக பணியாளர்களையும், நிறுவனங்களையும் பழிவாங்குவது என்பது அமெரிக்காவின் சட்டங்களுக்கும், பொது உணர்விற்கும் புறம்பானதாகும் என்று இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் மெலிசா குரோ கூறியுள்ளார்.