பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி முதல் துவங்குகிறது என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இது குறித்து சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்க 31ம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜூன் 20ஆம் தேதி ரேண்டம் எண் அளிக்கப்படும், 25ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.
கலந்தாய்வு நாட்கள், கடந்த ஆண்டை விட 15 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுரிகளில் கூடுதலாக 2,160 இடங்கள் கிடைக்கும். மொத்த இடங்கள் 1,34,481. முதல்வர் அறிவித்தவாறு மேலும் 5 பொறியியல் கல்லுரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
இந்த ஆண்டில் கல்லூரிக் கட்டணம் உயர்த்துவது இல்லை என்று குழு முடிவு செய்துள்ளது. நன்கொடை வாங்குவதை மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் கொண்ட குழு கண்காணிக்கும்.
மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடரும். முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதமும், அருந்ததியர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீட்டில் 3 சதவீதமும் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
முன்னதாக, சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 6ல் தொடங்கும் என்று தெரிவித்தார்.