இந்தியாவின் அயல் வணிகப் பணித் துறைக்கு அச்சுறுத்தல்: அசோசம் ஆய்வறிக்கை
வெள்ளி, 15 ஏப்ரல் 2011 (13:21 IST)
பணித் திறன் கொண்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதும், பணியாளர்கள் வேலையை விட்டு வேலைக்கு தாவுவதும் இந்தியாவின் அயல் வணிகப் பணி (Business Process Outsourcing - BPO) நிலையை பன்னாட்டு போட்டியில் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (Associated Chambers of Commerce and Industries of India - ASSOCHAM) கூறியுள்ளது.
அயல் வணிகப் பணி செய்யும் நிறுவனங்களில் அசோசம் அமைப்பு நடத்திய ஆய்வில், பணியாளர்கள் அடிக்கடி வேலை விட்டு விலகி வேறு இடத்தில் வேலைக்கு அமர்வது 55 விழுக்காடு அளவிற்கு கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளது.
அசோசம் நடத்திய ஆய்வு பற்றி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அசோசம் அமைப்பின் பொதுச் செயலர் டி.எஸ்.ரவாத், “ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சியான வேலை வாய்ப்பாக விளங்கிய அயல் வணிகப் பணித் துறை, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது மட்டுமின்றி, மிகப் பெரும் எண்ணிக்கையில் திறன் பணியாளர்களையும் உற்பத்தி செய்தது. ஆனால், இப்போது பணியிடம் மாற்றிக்கொள்ளும் பணியாளர்களின் எண்ணிக்கையும், திறன் பணியாளர் எண்ணிக்கை குறைவும் இத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன” என்று கூறியுள்ளார்.
அயல் வணிகப பணியுடன், தகவல் தொழில் நுட்ப சேவைத் துறையையும் (ITes) இணைத்தால், கடந்த 2 ஆண்டுகளில் வேலை மாறிய பணியாளர்களின் எண்ணிக்கை 65 விழுக்காடாக இருக்கிறது என்று கூறியுள்ள அசோசம் அறிக்கை, வங்கிகள், நிதி சேவைகள், காப்பீடு ஆகிய துறைகளுக்கு அயல் வணிகப் பணி செய்துவரும் நிறுவனங்களில் 60 விழுக்காடு அளவிற்கு வேலை மாற்றம் இருந்து வருகிறது என்று கூறியுள்ளது.
இந்த வேலை மாற்ற பிரச்சனை என்பது இடை, மேல் நிர்வாக அளவில் இருப்பதால் நிறுவனங்களின் பணித் திறனை அது பெரிதும் பாதிக்கிறது என்றும், இப்படிப்பட்ட ஒரு நிலை தொடர்வது உலகின் தலைசிறந்த அயல் வணிகப் பணி செய்யும் நாடாகத் திகழும் இந்தியாவின் நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளதென்று அசோசம் அறிக்கை தெரிவித்துள்ளது.
அயல் வணிகப் பணியில் மெக்சிகோ, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், சீனா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து கடும் போட்டியை சந்தித்துவரும் இந்திய அயல் பணி நிறுவனங்களுக்கு திறன் சரிவும், வேலை தாவலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதென அசோசம் எச்சரித்துள்ளது.