11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்திற்குள் புதிதாக 1.5 கோடி வேலைவாய்ப்பு: மத்திய அரசு
திங்கள், 13 ஜூலை 2009 (17:57 IST)
இந்தியாவில் கடந்த 2007ஆம் ஆண்டு நிலவரப்படி 2 லட்சம் பொறியாளர்களும், பட்டயப்படிப்பு முடித்த 1.32 லட்சம் பேரும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலவரப்படி வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஹரிஷ் ராவத், கடந்த 2007ஆம் ஆண்டு நிலவரப்படி 1.93 லட்சம் பொறியாளர்களும், பட்டயப்படிப்பு முடித்த 1.32 லட்சம் பேரும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகக் கூறினார்.
ஐந்தாண்டுத் திட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன்படி 11வது ஐந்தாண்டுத் திட்ட காலம் முடிவடைவதற்குள் ஆண்டுக்கு 9% வளர்ச்சி விகிதத்தில் புதிதாக 1.5 கோடி வேலைவாய்ப்புகள் (பொதுத்துறை மற்றும் அமைப்பு சார்ந்த துறைகளில்) உருவாக்கப்படும் என்றும் இணை அமைச்சர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு கோடியே 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையிலான திட்டங்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதிப்படுத்தும் என்று தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.