பரோட்டா கடையில் வேலைபார்த்தவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
செவ்வாய், 5 மே 2009 (12:09 IST)
பரோட்டா கடையில் வேலைபார்த்து படித்தவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் 53வது தரவரிசையில் பெற்றுள்ளார்.
படிப்பிற்கு, ஏழ்மையும், பொருளாதாரமும் ஒரு தடையாக இருக்காது என்பதை இவரும் நிரூபித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் மதுரையை சேர்ந்த வீரபாண்டியன் வயது 28 அகில இந்திய அளவில் 53-வது தரவரிசையில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது சொந்த ஊர் மதுரை யாகப்பாநகர். இவரது தந்தை பாத்திரங்களை தலையில் சுமந்து சென்று வியாபாரம் செய்து வருகிறார். பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே + 2 படித்து முடித்தார். +2வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் 2வது இடம் பிடித்த இவருக்கு முதலமைச்சர் கருணாநிதி 1 லட்சம் நிதி உதவி அளித்தார்.
அதன் பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் கட்டணம் ஏதும் இன்றி பி.ஏ. சமூகவியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் எப்படியும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆவலில் சென்னையில் 5 வருடங்களாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்துள்ளார். இன்று ஐஏஎஸ் தேர்வில் 53வது இடத்தில் வெற்றி பெற்று இளைஞர் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உருவாகியுள்ளார்.
அவரது அயராத உழைப்பும், கல்வித் திறனும் அவரை ஐஏஎஸ் ஆக்கியுள்ளன.
எந்த லட்சியத்தையும் அடைய பொருளாதாரம் தடையாக இருக்க முடியாது என்பதை வீரபாண்டியன் நிரூபித்து உள்ளார்.