ஆஸி.யில் மாணவர்கள் மீது தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது சீனா

வியாழன், 4 ஜூன் 2009 (14:10 IST)
ஆஸ்ட்ரேலியாவில் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை தடுக்குமாறு இந்தியாவுடன் இணைந்து சீனாவும் குரலெழுப்பியுள்ளது. அயல்நாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்ட்ரேலியா அரசை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகைக்கு ஆஸ்ட்ரேலியாவுக்கான சீன தூதர் லியு ஜின் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்ட்ரேலியாவில் தங்கியுள்ள தங்கள் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திட சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் 1,30,000க்கும் அதிகமான சீன மாணவர்கள் தங்கி பயின்று வருவதாகவும், ஆனால் சமீப காலமாக தங்கள் நாட்டு மாணவர்கள் மீதும் ஒரு சில தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

எந்தெந்த இடங்களில் சீன மாணவர்கள் தாக்கப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்ட லியூ ஜின், ஆஸ்ட்ரேலியாவில் பயின்று வரும் சீனா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நியாயமான உரிமைகளை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை ஆஸ்ட்ரேலிய அரசு மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்