இந்தாண்டு தனித் தேர்வர்களுக்கான SSLC, மெட்ரிக். பொதுத் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், SSLC, ஓ.எஸ்.எல்.சி. தனித்தேர்வுகள் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று 14.5 வயது பூர்த்தியடைந்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். ஏற்கனவே SSLC, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்களும் இந்தத் தேர்வு எழுதத் தகுதி உடையவராவர்.
தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வழங்கப்படும். நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுத்துறை துணை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அல்லது தபாலில் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.