பி.எட். படிப்பு: அடுத்த வாரம் விண்ணப்பம் வினியோகம்
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (12:37 IST)
பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் அடுத்த வாரம் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பரில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 22 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2,200 பி.எட். இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90% இடங்களும் (சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் 50%) கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 45% மதிப்பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 43% மதிப்பெண், எஸ்.சி.வகுப்பினருக்கு 40% மதிப்பெண் போதும். சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர்.
பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த வாரம் வழங்க சென்னை லேடி வெலிங்டன் கல்வியில் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனம்தான் இந்த ஆண்டும் பி.எட். கலந்தாய்வை நடத்த இருக்கிறது. 2,200 இடங்களை நிரப்புவதற்காக 15 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்படுகிறது.
பி.எட். மாணவர் சேர்க்கையை அடுத்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் நிறைவு செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.