உயர்கல்விக்கு கிவ் லைஃப்-லயோலா உதவித்தொகை

திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (13:23 IST)
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்து வரும் கிவ் லைஃப் அறக்கட்டளை, லயோலா கல்லூரியின் அவுட்ரீச் திட்டத்துடன் இணைந்து, பிளஸ்-2 முடித்து உயர் கல்விக்கு உதவியின்றி தவிக்கும், ஏழை மாணவ-மாணவியரின் மேல்படிப்பிற்கு உதவித் தொகையை வழங்கியுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியின் ஜூபிளி பிளாக், லாரன்ஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லயோலா கல்லூரியுடன் ஓரியண்டல் குஸைன்ஸ் இணைந்து அவுட்ரீச் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

மாணவ-மாணவியரின் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்குவது கடந்த 2006-07ஆம் கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
PR photo
PR

ஓரியன்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், கிவ் லைஃப் அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவருமான மகாதேவன் இந்த உதவித்தொகை வழங்குவதற்கு தீவிர முன்முயற்சி எடுத்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்று உதவித்தொகையை வழங்கிய ஸ்ரீராம் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அகிலா ஸ்ரீனிவாசன் பேசுகையில் குறிப்பிட்டார்.

கிவ் லைஃப் அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டியுமான அகிலா ஸ்ரீனிவாசன் மேலும் கூறுகையில், உதவித்தொகையைப் பெற்று படித்து டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகும் மாணவர்கள் மேல்பதவிக்கு வந்த பின் தங்களுக்கு கீழ் உள்ள, ஏழை சமுதாயத்திற்காக உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

டெல்லி பாபு, கோபி, பவானி, அர்ஜூனிசா, அப்துல் ஆகிய மாணவர்களுக்கு மேடையில் உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை, தமிழ் மையத்தைச் சேர்ந்த ஜெகத் கஸ்பார், கல்லூரியின் துணை முதல்வர் சேவியர் வேதம் ஆகியோர் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்