ஆசிரியர் பயிற்றுநர் தேர்வாளர்களுக்கு ஆகஸ்ட் 25இல் கலந்தாய்வு
வியாழன், 20 ஆகஸ்ட் 2009 (13:43 IST)
ஆசிரியர் பயிற்றுநர் தேர்வாளர்கள் 351 பேருக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் கல்வி” திட்டத்தைச் சார்ந்த வட்டார மற்றும் குறுவள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பாடங்களுக்கான 351 தேர்வாளர்களுக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக வரும் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள புனித ரபேல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். கலந்தாய்விற்கு வரும் தேர்வாளர்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அசல் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து பெறப்பட்ட தெரிவுக் கடிதம் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.