முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது.
மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.
ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.