''மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்'' என்று முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கையோடு, கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழகத்தில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கப்படுவதாக மின்சார வாரியம் அதிரடியாக உத்தரவிட்டது. வீடுகளுக்கான பகல் நேர மின்வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அறிவித்தது. ஆனால் அதுவரை மின்வெட்டு அறிவிக்கப்படாத சென்னை மாநகரில் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்றும் கூறியது.
சென்னையை எடுத்துக் கொண்டால் தற்போது காலை 8 மணிக்குத் தொடங்கி பகுதி வாரியாக ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அறிவித்தப்படி, ஒரு மணி நேர மின்வெட்டு என்றில்லாமல், அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. இது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடம் வரை நீட்டிக்கிறது. தற்போது வெயில் மக்களை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் மின்வெட்டினால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் பொது மக்கள்.
பகல் நேரங்களில் கூட மின்வெட்டை சமாளித்து வீட்டை விட்டு வெளியே வந்து மக்கள் காற்று வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் அதில் நள்ளிரவில் ஏற்படும் மின்வெட்டை மக்களால் சமாளிக்க முடியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்த நாளில் இருந்து ஒரு அறிவிக்கப்படாத மின்வெட்டு நள்ளிரவு நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு சில ஆயிரங்களை தாண்டிவிடுகிறது. இதனால் பாதி விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவுக்கு மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசு, அந்த விவசாயிகளை வாழ வைக்கிறதா என்பது இல்லை. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டின கதையாக இருக்கிறது தமிழக அரசின் இந்த இலவச மின்சாரம் திட்டம்.
மின்பற்றாக்குறை இருப்பதால் மின்வெட்டு தொடர்கிறது என்று கூறும் தமிழக அரசு, பகல் நேரங்களில் தான் மின்சாரத்தை அதிகமாக தடை செய்கிறது. ஆனால் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுத்தாமல் இருக்கலாமே என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும் என்று கூறும் முதலமைச்சர் கருணாநிதி, மின் உற்பத்தித் திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை இனி ஆட்சி அமைக்கப் போகிறது அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.