திருப்பரங்குன்றம் போராட்டத்தில் எச்.ராஜா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு அவர்லாம் ஒரு மனுஷனே கிடையாது என ஆவேசமாக பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோவில் - சிக்கந்தர் தர்கா விவகாரம் சமீப காலமாக பூதாகரமாகி வரும் நிலையில், நேற்று இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த முயன்றன. ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி அளிக்காததுடன் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் வேறு இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சிக்கந்தர் தர்கா குறித்தும், திமுக குறித்தும், காவல்துறை குறித்தும் பலவாறு பேசினார்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக செயல்படுகிறது. ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து இந்த ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி என்றும் நிறைவேறாது” என்று பேசினார்.
எச்.ராஜா பேசியது குறித்து கேட்டபோது கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு “ஒரு உள்ளாட்சி தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர். நீதிமன்றம் தேவையென்றால் ஆஹா, ஓஹோ என புகழ்வார். தேவையில்லை என்றால் தலைக்கு மேல் உள்ளதை காட்டி மலினமாக பேசுவார். இரட்டை நாக்கை படைத்தவர். இன, மத, மொழியால் மக்களை பிளவுப்படுத்துவதே அவர் நோக்கம். அவர் ஒரு மனிதனே அல்ல. அவரது விஷம பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K