விரைவில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக அணியோடு இணையவுள்ளார். கம்பீர் பயிற்சியாளர் ஆவதில் சாதகமான அம்சம் உள்ளது போல பாதகமாக அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இந்திய அணியின் மூத்த வீரர் கோலியுடன் அவரின் கடந்த கால உறவு சுமூகமாக இருந்ததில்லை. ஐபிஎல் தொடரின் போது இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவங்களை கிரிக்கெட் உலகமே பார்த்துள்ளது.
கம்பீர் ஆக்ரோஷமான செயல்திட்டம் கொண்டவர். அவர் அனைவரையும் தன்வழிக்கு வரவைக்கும் முனைப்புக் கொண்டவர். ஆனால் கோலி, ரோஹித் ஷர்மா போன்றவர்களை இது அவர்களின் ஈகோவைத் தூண்டாமல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதாரணமாக கம்பீர் கேகேஆர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் அந்த அணியின் பேட்டிங் வரிசையை அப்படியே மாற்றினார். அது நல்ல பலனையும் கொடுத்தது. ஆனால் இந்திய அணிக்குள் அவர் அதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுத்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
குறிப்பாக கோலிக்கும் அவருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் அடுத்து வரும் ஆண்டுகளில் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படும். ஏனென்றால் கோலி, பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் பதவி விலகவும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.