12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30ம் தேதி இங்கிலாந்தில் துவங்குறது. அடுத்த உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய டாப் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஆனால் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி நேரடியாக போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனவே எஞ்சிய 2 அணிகளுக்கான தேர்வு நாளை ஜிம்பாப்வேயில் துவங்கிறது.
இதில் ஏ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். பின்னர் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும். பின்னர் நடைபெறும் சூப்பர் சிக்ஸில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும். எனவே மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கோப்பை தகுதி அணியில் இடம்பெற முனைப்பில் விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது.