நேற்றைய மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் அதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இன்றோடு முடிவடையும் நிலையில் ப்ளே ஆப் செல்வதற்கு ஏற்கனவே 4 அணிகள் தேர்வாகிவிட்டன. அப்படி டாப் 4 இடத்திற்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் நேற்று போட்டி நடைபெற்ற நிலையில் மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
நேற்றைய வெற்றியின் மூலம் 19 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் போட்டிகளில் குவாலிபயர் 1 போட்டிகளுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த சீசனில் 14 போட்டிகளில் 9 போட்டிகளை வென்றெடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்
இந்நிலையில் இந்த வெற்றிக் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “இந்த ஐபிஎல் சீசனில் அனைத்து போட்டிகளையுமே வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்காக இருந்தது. அதற்கு சரியான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் அவரது பங்களிப்பை அளித்தனர். நான் முழு சுதந்திரமாக விளையாடுவதற்கும், கேப்பிடன்சியில் செயல்படுவதற்குமான வாய்ப்புகளை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்தார். அனைத்து வீரர்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கு அதிகமான போட்டிகளில் வெல்ல வேண்டியது இருந்தது. அதை நான் செய்தேன்” என பேசியுள்ளார்.
கடந்த சீசனின் கொல்கத்தா அணி கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் நல்ல கேப்டனாக பஞ்சாப் கிங்ஸ் அணியை குவாலிபயருக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டு சீசன்களில் இரு வெவ்வேறு அணிகளுக்காக கோப்பை வென்ற வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K