இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!

Prasanth Karthick

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (08:20 IST)

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுலின் ஆட்டம்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேச்சுபொருளாக மாறியுள்ளது.

 

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்திருந்தது. இரு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணிகள் என்ற அளவில் இருந்ததால் ரன்களை ஸ்கோர் செய்வதே சிம்ம சொப்பனமாய் இருந்தது. இந்த நிலையில் சேஸிங்கில் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸுக்கும் இருந்தது, கே.எல்.ராகுல் அதிரடி காட்டும் வரை..!

 

164 ரன்கள் இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணியின் ஓப்பனர் டூ ப்ளெசிஸ் 2வது ஓவரிலேயே அவுட், அடுத்த பந்திலேயே மெக்கர்கும் காலி. 4.3வது ஓவரில் அபிஷேக் பொரெல் விக்கெட். எல்லாருமே சொல்லி வைத்தாற் போல 10 ரன்கள் கூட தாண்டாமல் சிங்கிள் டிஜிட் அவுட்.

 

அப்போது களமிறங்கிய கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டமெல்லாம் ஆடவில்லை. பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார். பவர்ப்ளே முடிந்தபோது 40 ரன்களே எடுத்திருந்த டெல்லி அணியை கே.எல்.ராகுல் கொஞ்ச கொஞ்சமாக நகர்த்திக் கொண்டிருந்தார். உடன் இருந்த அக்‌ஷர் படேல் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், பார்ட்னர்ஷிப்பில் வந்த ஸ்டப்ஸை அதிரடி வேண்டாம் அமைதியாக ஆடுவோம் என சொல்லி ஆட்டத்தை மெல்ல நகர்த்தினார். கிடைக்கும் வாய்ப்பில் சில பவுண்டரிகள்.

 

ஆனால் அப்படி செய்தே 11வது ஓவருக்கெல்லாம் ஸ்கோரை 90 ரன்களுக்கு தள்ளிக் கொண்டு வந்தவர் அதற்கு பிறகு அதிரடியில் இறங்கினார். கே.எல்.ராகுலின் மட்டையிலிருந்து பவுண்டரிகளும், சிக்ஸருமாக பறக்க அவரை கண்ட்ரோல் செய்ய முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திண்டாடினர்.

 

மொத்தமாக 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை விளாசி 93 ரன்களை குவித்த கே.எல்,ராகுல், டெல்லி அணியை 17.5வது ஓவரிலேயே 169 ரன்களில் வெற்றிபெற செய்தார். அடித்து முடித்து வெற்றி அறிவிக்கப்பட்டபோது மொத்த மைதானத்தையும் பார்த்து “இது என் ஊரு.. இது என்னோட க்ரவுண்டு” என்பதுபோல அவர் காட்டிய சைகை ரசிகர்களை மிரள வைத்தது.

 

வெற்றிக்கு பின் அவர் பேசியபோதும் “இது என்னுடைய மைதானம். இது என்னுடைய வீடு. மற்ற எவரையும் விட எனக்கு இதை நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்