கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர்.. பின்னணி என்ன?

vinoth

புதன், 24 செப்டம்பர் 2025 (10:44 IST)
இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று கேப்டன்கள் இந்திய அணியைக் கடந்த சில மாதங்களாக வழிநடத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில்லும், டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும் வழிநடத்துகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து தான் தலைமையேற்கும் அணிகளை இறுதிப் போட்டி வரைக் கொண்டு சென்றும், கொல்கத்தா அணிக்காகக் கோப்பையை வென்றும் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாகும் அளவுக்கான திறமை அவருக்கு இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் நடக்கும் Multi day போட்டிகளுக்கான இந்திய A அணிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான இந்தியா A அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் இப்போது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இது சம்மந்தமாக அவர் பிசிசிஐக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதில் “எனக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு ஓய்வு தேவை. எனக்கு முதுகுப் பகுதியில் தசை இறுக்கமும், சோர்வும் உள்ளதால் இந்த முடிவை எடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்