குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்ட்யா பற்றி பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “ டாஸ் போட வரும்போதோ அல்லது பேட் செய்ய வரும்போதோ ஹர்திக் பாண்ட்யா அதிகமாக சிரித்துக் கொண்டே வருகிறார். அதன் மூலம் தான் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார். ஆனால் அவர் உண்மையில் வருத்தத்தில்தான் உள்ளார். ரசிகர்கள் அவரை தொடர்ந்து எதிப்பது அவரை மிகவும் பாதித்துள்ளது. இதுவே அவரின் ஆட்டம் மற்றும் கேப்டன்சியைப் பாதித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.