இந்தியா அபார வெற்றி: தெ.ஆ அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது!
சனி, 27 ஜனவரி 2018 (20:42 IST)
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த கடைசி வாழ்வா சாவா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வாஷ் அவுட் ஆவதை தவிர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ள நிலையில், வாஷ் அவுட்டை தவிற்க, ஆறுதல் வெற்றி பெற மூன்றாவது போட்டியில் இந்திய அணி விளையாடியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் வழக்கம் போல இந்திய அணி வீரர்கள் சொதப்பி முதல் இன்னிங்சில் 187 ரன்னுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்தது. இதனையடுது களமிறங்கிய தென்னாப்பிரக்கா அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்தது. முரளி விஜய்(25), கோலி(41), ரஹானே(48), புவனேஸ்வர் குமர்(33), முகமது ஷமி(27) ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்திய அணி 247 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஏற்கனவே 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 241 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.
இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கு என்பது சற்று கடினமானதுதான். ஆனாலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இது சொந்த மண் என்பதாலும், அவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதாலும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு என்பது வாழ்வா சாவா என்பது தான் என கணிக்கப்பட்டது.
இதனையடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்க விக்கெட்டை 5 ரன்னில் இழந்தாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆம்லாவும், எல்கரும் சிறந்த பங்களிப்பை அளித்து இந்தியா வீரர்களின் வயிற்றில் புளியை கரைத்தனர். ஒருவழியாக இந்த ஜோடி 124 ரன் எடுத்திருந்த போது பிரிந்தது.
ஆம்லா 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் உற்சாகமடைந்த இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்து வந்த யாரையும் நிலைத்து நின்று ஆட விடவில்லை. ஒவ்வொருவராக பெவிலியன் நோக்கி வந்த வேகத்தில் திரும்பினர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் எல்கர் 86 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இதில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் இந்த இன்னிங்சில் முகமது சமி 5 விக்கெட்டும் பும்ரா, இசாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.