அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை விளையாடியுள்ள சிஎஸ்கே அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முன்களத்தில் இளம் வீரர்களை தோனி களமிறக்கியது விமர்சனத்திற்கு உள்ளானது.
மிகப்பெரும் ரன் இலக்கு உள்ள சமயத்தில் இளம் வீரர்களை முன்னால் இறக்கிவிட்டு தோனி ஏழாவதாக இறங்கியது குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் சரியாக பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளாத காரணத்தால் கடைசியாக களம் இறங்கியதாக தோனி விளக்கமளித்தார்.
உலக கோப்பைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தோனி விளையாட வந்திருப்பதால் ரசிகர்கள் அவர் ஆட்டத்தை வெகுவாக எதிர்பார்த்து வரும் நிலையில் ஏழாவது இடத்தில் களம் இறங்கி தோனி சுமாராக விளையாடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முந்தைய ஆட்டத்தில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசியிருந்தாலும் அது அணியின் வெற்றிக்கு பயன்படவில்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் தோனி முதலாவதாக களமிறங்கி தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், அதுவே சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தரும் வழி என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.