முன்னாடியும் இப்பவும் எப்போதும் தப்பாதான் பேசுவாரு… கைஃபை விமர்சித்த பும்ரா!

vinoth

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (09:16 IST)
இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரை முக்கியமானத் தொடர்களில் விளையாட வைப்பது குறித்த உத்திரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது நடந்துவரும் ஆசியக் கோப்பை தொடரில் கூட அவர் சிறப்பாக விளையாடவில்லை. வழக்கமாக இறுதி ஓவர்களில் எதிரனி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பும்ரா இந்த தொடரில் தொடக்கத்திலேயே மூன்று ஓவர்களை வீசிவருகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் “பும்ரா ரோஹித் ஷர்மா தலைமையில் 1, 13, 17, 19 ஆகிய ஓவர்களை வீசுவார். ஆனால் சூர்யா தலைமையில் ஆசியக் கோப்பையில் காயத்தைத் தவிர்ப்பதற்காக முதலிலேயே மூன்று ஓவர்களை வீசிவிடுகிறார்.  இப்போதெல்லாம் பும்ரா தன் உடல் போட்டியின் தொடக்கத்தில் ஆற்றலோடு இருக்கும்போதே பந்துவீசிவிட நினைக்கிறார். 14 ஓவர்களுக்குப் பிறகு பும்ரா ஒரு ஓவர்தான் வீசுவார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார். கைஃபின் இந்த பதிவைப் பகிர்ந்துள்ள பும்ரா “முன்பும் இவரிடம் இருந்து சரியான தகவல்கள் வந்ததில்லை. இப்போதும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்