இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறார் அபிஷேக் ஷர்மா. முதல் பந்தில் இருந்தே முதலே பவுண்டரிகளை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பான, தரமான இன்னிங்ஸ்களை அவர் ஆடினார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். தற்போது டி 20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அணியில் தனக்குக் கிடைத்த ஆதரவு பற்றி பேசியுள்ளார். அதில் “ ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பு நடந்த வங்கதேசத் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. அப்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடம் “நீ 15 முறை டக் அவுட் ஆனாலும், உனக்கு வாய்ப்புக் கொடுப்பேன். நீ முக்கியமான ஆள். இதை வேண்டுமானாலும் எழுதி வைத்துக்கொள் என நம்பிக்கை அளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.