இன்று நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது. இன்றாவது கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் அவுட் ஆனார். சதம் அடிக்க வாய்ப்பிருந்த சுப்மன் கில்லும் 92 ரன்களில் அவுட் ஆனார். மூன்றாவதாக சதம் அடிக்க வாய்ப்பிருந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்களில் அவுட் ஆனார்.
இந்தியாவின் மூன்று வீரர்களை சதம் அடிக்க முடியாமல் செய்த இலங்கை அணிக்கு இந்திய அணி அசுரத்தனமான பந்து வீச்சால் பெரும் நெருக்கடியை கொடுத்தது. பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை தொடங்கி வைக்க அடுத்து வந்த சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கினார். இலங்கை அணி என்றாலே சிராஜ்க்கு விக்கெட் மழைதான். ஆனால் ஷமியும் ஈடுகொடுத்து சிராஜ்க்கு நிகராக விக்கெட்டை வீழ்த்தி வந்தவர் தொடர்ந்து முன்னேறி 5 விக்கெட்டுகளை இந்த போட்டியிலும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணிக்காக உலக கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கான் மற்றும் ஜகவல் ஸ்ரீநாத் சாதனையை சமன் செய்துள்ளார். ஜகவல் ஸ்ரீநாத் 33 இன்னிங்ஸில் 44 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 23 இன்னிங்ஸில் 44 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ளனர். ஆனால் ஷமி இந்த 44 விக்கெட் சாதனையை வெறும் 14 இன்னிங்ஸிலேயே தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.