ஜாகிர் நாயக்: "இந்திய பிரதமர் மோதியின் பிரதிநிதி என்னை சந்தித்துப் பேரம் பேசினார்"
சனி, 11 ஜனவரி 2020 (21:59 IST)
சதீஷ் பார்த்திபன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்.
காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாகிர் நாயக்கின் கூற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நரேந்திர மோதி அரசு தமக்கு தூது அனுப்பியதாக இவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் உள்ளார். அந்நாட்டு அரசு விதித்துள்ள தடை காரணமாக அவர் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதில்லை. தவிர, ஊடகப் பேட்டிகளையும் பல மாதங்களாகத் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சார்பாக ஒரு பிரதிநிதி தம்மை கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாத இறுதியில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளிப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சுமார் ஐந்தரை நிமிடங்களுக்கு நீளும் அந்தக் காணொளிப் பதிவில், கடந்த மூன்றரை ஆண்டு காலமாக பாஜக அரசு தம்மை வேட்டையாடி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மூன்றரை ஆண்டுகளாக என்னை வேட்டையாடிய பாஜக அரசு இப்போது பேரம் பேசுகிறது"
கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு, இந்திய அதிகாரிகள் தம்மை தொடர்பு கொண்டதாகவும், இந்திய அரசின் பிரதிநிதியுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு வருமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள ஜாகிர் நாயக், பிரதமர் மோதி, அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் வந்திருப்பதாக அந்தப் பிரதிநிதி தம்மிடம் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
"எனக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான தவறான கருத்தாக்கங்கள், தகவல்களை அகற்ற வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அந்தப் பிரதிநிதி தெரிவித்தார். இதன் மூலம் நான் பாதுகாப்பாக இந்தியா திரும்ப வழிசெய்ய முடியும் என்றும் கூறினார்.
இதே பாரதிய ஜனதா அரசாங்கம்தான் கடந்த மூன்றவரை ஆண்டுகளாக என்னை வேட்டையாடி வருகிறது. இந்தியப் பிரதமர் கடந்த 2019 மே மாதம் தமது தேர்தல் உரையின்போது இரண்டு நிமிடங்களுக்குள் எனது பெயரை ஒன்பது முறை பயன்படுத்தினார். தற்போது அவர்கள்தான் நான் பாதுகாப்பாக நாடு திரும்புவது தொடர்பாக என்னிடம் பேரம் பேசுகிறார்கள்," என்று ஜாகிர் நாயக் காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளுடன் தாம் கொண்டுள்ள தொடர்புகள் மூலம், இந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக அந்தப் பிரதிநிதி தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார் ஜாகிர் நாயக்.
"இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் ஏதும் செய்யச் சொல்லாத வரையில் உங்களுடன் ஒத்துழைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அந்தப் பிரதிநிதியிடம் கூறினேன். மேலும், தனிப்பட்ட ஆதாயங்கள் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தேன்," என்று ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.
"காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைக்க இயலாது..."
இந்தச் சந்திப்பானது பலமணி நேரங்கள் நீடித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை மோதி அரசு ரத்து செய்ததை தாம் ஆதரிக்க வேண்டும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு தாம் மறுத்துவிட்டதாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப் பொறுத்தவரையில் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அது காஷ்மீர் மக்களின் உரிமைப் பறிப்புநடவடிக்கைதான் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ள ஜாகிர் நாயக், தம்மால் அநீதியான செயல்பாட்டை ஆதரிக்கவோ, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைக்கவோ இயலாது என அந்தப் பிரதிநிதியிடம் உறுதிபடத் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
"இந்தியாவின் அமலாக்கத்துறை, காவல்துறை, என்ஐஏ என எந்த முகமை குறித்தும் நான் பேசலாம் என்றும், பாஜக அரசுக்கும், பிரதமர் மோதிக்கும் எதிராக மட்டும் ஏதும் பேச வேண்டாம் என்றும் அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு, அமலாக்கத்துறை, காவல்துறை உள்ளிட்டவற்றை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில் அவை தங்களது அரசியல் எஜமானர்கள் சொல்வதையே செய்கின்றன என்று நான் சொன்னேன். கட்டாயத்தின் பேரில் அவை செயல்படுகின்றன. நான் எந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசவில்லை. நான் இஸ்லாத்தின் செய்தியை பரப்புகிறேன். யாருக்கும், எந்த இஸ்லாமியருக்கும் அநீதி செய்யாத வரையில், நான் ஏன் அவர்களுக்கு எதிராக பேச வேண்டும்? என்று அந்தப் பிரதிநிதியிடம் கேட்டேன்," என்று ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
"இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் மிரட்டப்பட்டிருக்க வேண்டும்"
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய 370ஆவது சட்டப்பிரிவை நீக்கிய இந்திய அரசின் நடவடிக்கையை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவும் முழுமையாகவும் ஆதரிப்பதை தாம் அறிக்கைகள், காணொளிப் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவு கொண்ட இஸ்லாமியர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
"பாஜக அரசை ஆதரிக்கவில்லை எனில் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்த இஸ்லாமியத் தலைவர்கள் கண்டிப்பாக மிரட்டப்பட்டிருக்க வேண்டும். நிர்பந்தத்தின் பேரில், கட்டாயத்தின் பேரில் அவர்கள் அரசை ஆதரித்திருப்பார்கள்.
அநீதிக்கு எதிராக இந்திய முஸ்லீம்கள் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் இதைச் செய்ய அஞ்சுகிறீர்கள் எனில், குறைந்தபட்சம் அமைதியாக இருந்துவிட வேண்டும். மாறாக அநீதியை ஆதரிப்பதென்பது இஸ்லாத்துக்கு எதிரானது," என்று ஜாகிர் நாயக் மேலும் தெரிவித்துள்ளார்.
மத, இன நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கக் கூடாது என ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் குறித்தும், இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.