அக்னிபத் திட்டம்: பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம்!
வியாழன், 16 ஜூன் 2022 (13:37 IST)
இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் சாப்ரா மாவட்டத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்ததாகவும், பேருந்து ஒன்றை சேதப்படுத்தியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. அதேபோன்று, அம்மாநிலத்தின் ஜெஹனாபாத் பகுதியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் மட்டுமல்ல ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள், ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனம் தொடர்பான 'அக்னிபத்' கொள்கையை சமீபத்தில் அறிவித்தனர். அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால், "நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக" சிங்கப்பூரில் உள்ள எஸ் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த அனித் முகர்ஜி பிபிசியிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வமுள்ள, தங்களை தயார்படுத்திக்கொண்டு வரும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், "டூர் ஆஃப் டூட்டி முறையை கைவிட வேண்டும், முன்பு இருந்த முறையிலேயே ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டும் யாரும் ராணுவத்தில் சேரமாட்டார்கள்" என தெரிவித்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகர் ஜெய்பூரில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மற்றும் ரெவாரியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் போராட்டம்
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட முயன்றனர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் இவர்கள் தேர்வானார்கள் ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் கொரோனாவை காரணம் காட்டி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை.
இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இவர்கள் உடனடியாக எழுத்து தேர்வை நடத்த கோரியும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதை ரத்து செய்ய கோரியும் மறியல் செய்ய முயன்றனர் ஆனால் அவர்களை வேலூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தி திருப்பி அனுப்பினார்கள் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.