உலக ரத்த தான தினம்: ரத்த தானம் செய்வது உடலை பலவீனமாக்குமா? உண்மை என்ன?
புதன், 14 ஜூன் 2023 (11:28 IST)
உலக ரத்த தான தினம்: ரத்த தானம் செய்வது உடலை பலவீனமாக்குமா? உண்மை என்ன?
ஜூன் 14ஆம் தேதியான இன்று உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுப. ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
உலக ரத்த தானத்திற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் மாறும். அந்த வகையில், ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், உயிரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதே இந்தாண்டிற்கான கருப்பொருள்.
இந்தாண்டு கருப்பொருள் தொடர்ச்சியான ரத்ததானம் மற்றும் பிளாஸ்மா தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க ரத்தம் மற்றும் பிளாஸ்மா எப்போதும் கிடைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலக ரத்ததான தினத்தின் வரலாறு
உலக ரத்ததான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் கொண்டாடப்பட்டது.
பின்னர், 2005ஆம் ஆண்டு 58ஆவது உலக சுகாதார சபை கூட்டத்தின் போது உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் இந்த தினத்தை கடைபிடிக்க முடிவெடுத்தன.
அப்போது முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
ஜூன் 14ஆம் தேதி என்பது ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினம். இவர் நவீன ரத்த மாற்று நடைமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ரத்த வகை பிரிவுகளை உருவாக்கியதற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மனிதர்களின் ரத்தத்தை ஏ,பி, ஏபி, ஓ ஆகிய பிரிவுகளில் முதன்முதலில் வகைப்படுத்திய இவரது ஆராய்ச்சிகள், ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இடையே ரத்த மாற்று சிகிச்சை முறைக்கு வழிவகுத்தது.
நீங்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனமும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் வகுத்துள்ளது.
கீழ்காணும் 7 கேள்விகள் ரத்த தானம் குறித்து உங்களுக்கு தெளிவான புரிதலை வழங்கும்.
யார் ரத்த தானம் செய்யலாம்?
ரத்த தானம் செய்ய நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். ஆரோக்கியமாக உள்ள எந்தவொரு ஆணும், பெண்ணும் ரத்ததானம் செய்யலாம்.
தேசிய ரத்த மாற்று கவுன்சில் இணையதளத்தின் படி,
இந்தியாவில் ரத்த தானம் செய்ய நீங்கள் 18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.
சில நாடுகளில் 16, 17 வயதுடையவர்கள் அந்நாட்டு விதிகளின்படி ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கான முழு உடற்தகுதியுடன் அவர்கள் இருக்க வேண்டும்.
அதேபோல, சில நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த தானம் செய்ய அனுமதி உண்டு. சில நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
ரத்த தானம் செய்ய உங்கள் எடை 45கிலோவிற்கு குறைவாக இருக்கக்கூடாது. அதேபோல உங்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடாது.
யார் ரத்த தானம் செய்ய முடியாது?
கடந்த ஓராண்டுக்குள் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
மூன்று மாதத்திற்கு முன் மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
காலரா, டைபாய்டு, ப்ளேக் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது. அதேபோல, ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஓராண்டுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
புற்றுநோய் பாதித்தவர்கள், இதய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
பல் மருத்துவ சிகிச்சை எடுக்கும் போது அடுத்த 24 மணி நேரத்திற்கு ரத்த தானம் செய்யக் கூடாது. அதுவே பெரிய சிகிச்சையாக இருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
ஒருவரின் மூளையை மாற்றி புதிய மூளையை பொருத்த முடியுமா?
நீங்கள் அணியும் ஜீன்ஸை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் தெரியுமா?
நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவு நோயை நம்மால் தவிர்க்க முடியுமா? - எளிய விளக்கம்
ரத்த தானம் செய்வதற்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும்?
சில ரத்த தானம் செய்தவுடன் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். எனவே ரத்த தானம் செய்வதற்கு முன்னும் பின்னும் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
ரத்த தானம் செய்பவர் அதற்கு முன்பாக விரதம் இருக்க கூடாது. குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்திற்கு முன் உணவு உண்டிருக்க வேண்டும்.
ரத்த தானம் செய்வதற்கு முன் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல இரும்புச் சத்து நிறைந்த சிக்கன், முட்டை, மீன், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
ரத்த தானத்திற்கு பிறகு உணவில் பழங்களை சேர்த்து கொள்ளலாம். பழங்கள் சாப்பிடுவது சோர்வு மற்றும் பலவீனத்தில் இருந்து விடுபட உதவும்.
ரத்ததானம் உடலை பலவீனமாக்குமா?
ரத்த தானம் உடலைப் பலவீனமாக்கும் என்பது தவறான புரிதல். வயது வந்தவரின் உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின் போது 450மில்லிலிட்டர் ரத்தம் மட்டுமே உடலில் இருந்து எடுக்கப்படும். ஆரோக்கியமான ஒருவரின் உடல் இந்த ரத்தத்தை 24 முதல் 48 மணி நேரத்தில் மறு உற்பத்தி செய்துவிடும்.
ரத்த தானம் செய்யும் போது புதிய ரத்தம் மற்றும் ரத்த செல்கள் உருவாவது உடலில் முடுக்கிவிடப்படுகிறது. எனவே ரத்த தானம் செய்வதால் ஏற்படும் ரத்த இழப்பு ஓரிரு நாளில் ஈடுசெய்யப்படும்.
தொற்றுநோயை ஏற்படுத்துமா?
ரத்த தானத்தின் போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெவ்வேறு பரிசோதனைகள் மூலம் ரத்தம் பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே ரத்த தானம் செய்வதால் தொற்றுநோய் ஏற்படாது.
ரத்த தானத்தின் போது ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
கொரோனா நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.
ரத்த தானத்தின் பயன்கள் என்ன?
இந்திய செஞ்சிலுவை சங்க இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, ரத்த தானத்தின் பலன் தேவையான ஒருவருக்கு ரத்தத்தை தானமாக அளிப்பதோடு நின்றுவிடுவதில்லை, அதில் வேறு சில பலன்களும் உள்ளன.
ரத்த தானம் செய்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வது மாரடைப்பை தடுக்கிறது.
இவை தவிர்த்து, ரத்த தானம் செய்வது உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதை வேகப்படுத்துகிறது.