தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியல்

சனி, 18 டிசம்பர் 2021 (14:00 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெண் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தொழிற்சாலையைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதில், 600 பேர் பூந்தமல்லி வெள்ளவேடு ஜமீன் கொரட்டூரில் உள்ள ஐஎம்ஐ என்ற விடுதியில் தங்கியுள்ளனர்.
 
இந்த விடுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உணவை உண்ட சுமார் 116 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர்களில் பலர் உடனடியாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை மோசமடைந்ததாக நேற்று வாட்சப்பில் செய்திகள் பரவின. இதனை பலர் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதையடுத்து, பெண்கள் மயங்கிய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை பலரும் வாட்சப் ஸ்டேட்டஸ்களாக வைக்கத் தொடங்கினர்.
குறிப்பிட்ட பெண்களின் நிலை குறித்துக் கேட்டபோது, தொழிற்சாலை நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த பேச்சின்போது நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், சிகிச்சை பெற்று வரும் கஸ்தூரி, ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக செய்திகள் பரவின. இதனால், வேறு விடுதிகளில் பணியாற்றிவரும் பெண்களும் சாலை மறியலில் அமர்ந்தனர்.
 
இதையடுத்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நடைபெற்றதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
இன்று காலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பெண் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் தொழிற்சாலையில் 2 பெண் ஊழியர்கள் இறந்ததாக வெளியாகும் தகவல் வதந்தி என்று தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட பெண்களிடம் வீடியோ கால் மூலம் போராட்டக்காரர்களுடன் பேச வைத்தார்.
 
சம்பந்தப்பட்ட ஐஎம்ஐ தனியார் விடுதியின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, "ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஊழியர்கள் ஐஎம்ஐ என்ற ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள். அதில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 116 பேருக்கு 'ஃபுட் பாய்சன்' ஏற்பட்டது. நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அதில், மூன்று பேர் பீ வெல் மருத்துவமனையிலும் ஒருவர் கேஎம்சியிலும் சேர்க்கப்பட்டார்கள். இவர்கள் நான்கு பேருமே குணமடைந்துவிட்டார்கள்.
 
ஆனால், அவர்கள் நிலைமை மோசமடைந்திருப்பதாக வாட்சப்பில் செய்திகள் பரவின. இதனால், ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினார்கள். இதற்கிடையில், இரண்டு ஊழியர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து, ஊழியர்களின் பட்டியலை வாங்கி, அதில் இந்த இருவருக்குக்கும் வீடியோ கால் செய்தோம்.
 
அவர்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்கள். கஸ்தூரி அரியலூரிலும் ஐஸ்வர்யா கொடுங்கம்பட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடமும் பேசியிருக்கிறோம். சிலர் தங்குமிட வசதியை மேம்படுத்தித் தர கேட்டிருக்கிறார்கள். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குழு அமைத்துத் தங்குமிடங்களின் வசதிகளை கண்காணிப்பார்கள். காஞ்சிபுரத்திலும் இதேபோல குழு அமைக்கப்படும். திருவள்ளூரில் விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
 
இதற்குப் பிறகு, தங்களுக்கு சரியான இருப்பிட, உணவு உள்ளிட்ட வசதிகள் வேண்டுமெனக் கோரி போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
 
தனியார் விடுதியின் மேலாளர் ஹேமலதா, முனுசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்