பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தருமா?

வியாழன், 15 மே 2014 (06:09 IST)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறை வியூகங்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று விவாதித்தனர்.

காலையில் இந்திய தலைநகர் புதுடில்லியிலும், மாலையில் குஜராத் மாநிலம் காந்திநகரிலும் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். குஜராத் மாநிலத்தில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாக்குப் பதிவுக்கு பின்னர் இந்திய ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்புகளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு ஆதரவான கணிப்புகளை வெளியிட்டுள்ளதால், ஆட்சி அமைப்பது தொடர்பிலும் விவதங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
 
இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினமான மே 16ம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின், ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறாது என்றும் அன்றைய தினம் ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தாங்கள் வேட்பாளர்களாக போட்டியிடும் தொகுதிகளில் இருப்பார்கள் என்றும் அக்கட்சியின் வட்டார தகவல்கள் உறுதி செய்துள்ளன.
 
மேலும் அந்தக் கூட்டம் தொடர்ந்து மே 17 அல்லது மே 18ம் தேதி தான் நடைபெறும் என்பதாலும், இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ஆட்சி மன்றக் குழுவில் மட்டும் தான் எடுக்கப்படும் என்பதாலும் முன்கூட்டியே அதற்கு மாற்றாக இந்த ஆலோசனை கூட்டங்கள் இன்று நடைபெறுவதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
 
இதற்கிடையே, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறத் தவறும் நிலையில், அது வெளியில் இருந்து கட்சிகளின் ஆதரவை நாடினால், அதற்கு ஆதரவு தருவது குறித்து தமிழகத்தின் ஆளும் அதிமுக தலைவர் ஜெயல்லிதா முடிவெடுப்பார் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்