மீன்களின் 'அவசரக் கலவி' புகைப்படத்துக்கு உயரிய விருது

புதன், 13 அக்டோபர் 2021 (14:06 IST)
பார்ப்பதற்கு நீருக்கு அடியில் நடந்த ஒரு வெடிப்பைப் போன்று காட்சியளிக்கிறது இது. 
 
ஒரு பெண் மீன் தனது கரு முட்டைத் தொகுப்பை வெளியிட்டவுடன் ஆண் மீன்கள் தங்களது விந்தணுக்களை அவசரமாக வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. உருமறைப்புக் களவாய் (camouflage groupers) எனப்படும் இனத்தைச் சேர்ந்தவை இந்த மீன்கள்.
 
பசிபிக் பெருங்கடலின் ஃபகரவா தீவுகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எடுத்த லாரன்ட் பல்லெஸ்டாவுக்கு இந்த ஆண்டின் மிக உயரிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்படுகிறது. "இது வலிமையான தொழில்நுட்பம்" என்று பாராட்டுகிறார் தேர்வுக் குழுவின் தலைவர் ரோஸ் கிட்மன் காக்ஸ்.
 
"இந்தப் படத்தின் சிறப்பு முழு நிலவின்போது எடுக்கப்பட்டது என்பது ஒரு பகுதி, ஆயினும் எடுக்கப்பட்ட நேரமும் முக்கியமானது. எப்போது எடுக்க வேண்டும் என்பது என்பதை அறிந்ததாக இந்தப் படம் அமைந்திருக்கிறது"
 
உருமறைப்பு களவாய் எனப்படும் இவ்வகை மீன்களின் வருடாந்திர இனப்பெருக்கம் ஜூலை மாதம் நிகழ்கிறது. இந்த நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் வரை குறிப்பிட்ட இடத்தில் கூடுகின்றன. அதே நேரத்தில் இந்தத் தருணத்துக்காகவே அவற்றை வேட்டையாடி உண்ணும் சுறாக்களும் காத்திருக்கின்றன.
 
சுறாக்கள் மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமான மீன்பிடிப்பு இந்த மீன் இனத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓர் இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
 
இவ்வகை மீன்களின் இனப்பெருக்க நேரம் ஓராண்டில் குறிப்பிட்ட முழுநிலவு இரவில், சுமார் ஒரு மணி நேரத்தில் தொடங்கி முடிந்துவிடும். "இந்த குறிப்பிட்ட தருணத்துக்காக நாங்கள் இதே இடத்தில் ஐந்து ஆண்டுகள் சுமார் 3,000 மணி நேரம் நீருக்குள் மூழ்கியிருந்தோம்" என்று கூறுகிறார் புகைப்படத்தை எடுத்த லாரன்ட்.
 
"கரு முட்டை தொகுப்பு ஏற்படுத்திய வடிவம் இந்தப் படத்துடன் என்னை நெருக்கமாக்கியது. பார்ப்பதற்கு இது தலைகீழான கேள்விக்குறி போல இருக்கிறது. இது இந்த முட்டைகளின் எதிர்காலம் பற்றிய கேள்வி. ஏனென்றால் பத்து லட்சத்தில் ஒன்று மட்டும் வயதுக்கு வரும் வரை பிழைத்திருக்கும். இது இயற்கையின் எதிர்காலத்துக்கான ஒரு குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது இயற்கையின் எதிர்காலத்தைப் பற்றிய மிக முக்கியமான கேள்வி. "
 
முதன்மை விருது தவிர நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட படம் என்ற பிரிவிலும் இந்தப் புகைப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்