'Go Back Stalin' ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக காரணம் என்ன? முதல்வர் கோவை பயணமும் பாஜக எதிர்ப்பும்

புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:04 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை மாவட்டம் சென்றுள்ள நிலையில், ''கோ பேக் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பாஜகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் இந்த ட்ரெண்டிங்கை முன்னெடுத்து வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (ஆக. 24) ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம் கோவை சென்றடைந்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் 'கோ பேக் ஸ்டாலின்' (GO BACK STALIN) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிறது.

திமுகவுக்கு சவாலாக உள்ள கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டம் இன்னும் கடும் சவாலானதாக உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ள மு.க.ஸ்டாலினையும் திமுகவையும் விமர்சித்து பாஜகவினர் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

காலை 11 மணிவரை 10,000க்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேகின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் இந்த ஹேஷ்டேகில் பதிவிட்டுள்ளனர்.
 

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா?

மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இதில் உண்மையில்லை என்று இரு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டுக்கு வரும்போது திமுக ஆதரவாளர்கள் 'கோ பேக் மோடி' என்பதை டிரெண்ட் செய்து வந்த நிலையில், இன்று தற்போது அதற்கு பதிலடியாக பாஜகவினர் 'கோ பேக் ஸ்டாலின்' என்பதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மு.க.ஸ்டாலினை வரவேற்றும் சில ட்வீட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்