பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த கார்ல்சன்?

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (20:26 IST)
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார்.
 
முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிவடைந்தைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று இந்திய செஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
 
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி, இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார் மேக்னஸ் கார்ல்சன்.
 
நார்வே நாட்டைச் சேர்ந்த 32 வயதான கார்ல்சன், 2011இல் முதன் முறையாக செஸ் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் இடத்தைக் கைப்பற்றினார்.
 
தனது 20 வயதில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்த அவர், மே மாதம் 2023 தரவரிசை நிலவரப்படி, நம்பர் ஒன் இடத்தை இன்னும் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை.
 
அதாவது கிட்டத்தட்ட12 ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து, செஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்ல்சன்.
 
கடந்த 2013இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவர், 2014, 2016, 2018 மற்றும் 2021 என மொத்தம் ஐந்த முறை உலகக் கோப்பையை முத்தமிட்ட சாதனை நாயகனாக திகழ்கிறார்.
 
அத்துடன், 2020 அக்டோபர் வரை, தொடர்ந்து 125 போட்டிகளில் தோற்காத வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார். குறிப்பிட்ட ஆண்டு வரை, 42 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்ததுடன், 83 ஆட்டங்களை சமனும் செய்திருந்தார் கார்ல்சன்.
 
அவரது இந்த சாதனைப் பயணம் தொடர்ந்தால், செஸ் உலகில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
கார்ல்சனுக்கு அவரது ஐந்தாவது வயதில் அவரின் தந்தை ஹென்ரிக் கார்ல்சன் செஸ் போட்டியை அறிமுகப்படுத்தினார்.
 
அதற்கு முன் இரண்டு வயதிலேயே, கார்ல்சனுக்கு இருந்த பொது அறிவு, அபாரமான நினைவாற்றல், புதிர்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு அவரின் தந்தை வியந்தார். இந்த திறமைகளே அவரை செஸ் போட்டிக்குக் கொண்டுவர அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.
 
ஆரம்பத்தில் தனது மூத்த சகோதரியை வெற்றி கொல்வதே கார்ல்சனின் அதிகபட்ச இலக்காக இருந்தது. ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர், தனது தந்தையின் அறிவுறுத்தலின்படி, ஆட்டத்தை வேறுவிதமாக மாற்றிக் கொண்டார் கார்ல்சன்.
 
தனக்குத்தானே ஆடிக் கொள்வது, செஸ் புத்தகங்களில் அளிக்கப்பட்டுள்ள யோசனைகளின்படி விளையாடுவது எனப் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு தனது திறனை வளர்த்துக் கொண்டார்.
 
 
கார்ல்சனுக்கு முன், ஆறு முறை டேனிஷ் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பென்ட் லார்சனின் Find The Plan தான் கார்ல்சன் கற்றுத் தேர்ந்த முதல் புத்தகம்.
 
இந்தப் புத்தகத்துடன் நார்வேயின் சிறந்த வீரரும், ஏழு முறை தேசிய சாம்பியனுமான ஜி.எம். சிமென் அக்டெஸ்டீன், கார்ல்சன் ஜூனியராக இருந்தபோது பயிற்சியாளராக இருந்தார்.
 
நார்வேயின் முன்னாள் ஜூனியர் சாம்பியனான டார்ப்ஜோர்ன் ரிங்டால் ஹேன்சனுடன் இணைந்து, கார்ல்சனை திறமைமிக்க இளம் வீரராக வளர்த்தெடுத்தார் அக்டெஸ்டீன்.
 
இவரது தீவிர பயிற்சியின் பயனாக, 2000ஆம் ஆண்டில், செஸ் தரவரிசையில் கார்ல்சனின் மதிப்பீடு 1000 புள்ளிகளுக்கு மேல் (904 முதல் 1,907 வரை) அதிகரித்தது.
 
கார்ல்சனின் அதிவேக ஆட்ட திறன் பார்வையாளர்களை மட்டுமின்றி, சக போட்டியாளர்களையும் சமயத்தில் மிரள வைத்தது.
 
ஜூலை 2000இல், நார்வேயில் நடைபெற்ற 11 வயதினருக்கு உட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், 11க்கு 10 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றார் அப்போது ஒன்பது வயது கார்ல்சன்.
 
 
கடந்த 1995 முதல் 2004 வரை, ஜூனியர் நிலையில் கார்ல்சன் படைத்த சாதனைகள், அவரை கிராண்ட் மாஸ்டர் நிலைக்கு அழைத்துச் சென்றன.
 
விஜ்க் ஆன் ஜீயிஸ் நடைபெற்ற எலைட் கோரஸ் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான தனது வேட்டையைத் தொடங்கினார்.
 
இந்தத் தொடரில் அவர் பெற்ற வெற்றி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான போட்டிகளுக்குள் நுழைய வழிவகுத்துக் கொடுத்தது. கூடவே, அவருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்பான்சரும் கிடைத்தது.
 
எலைட் கோரஸ் போட்டியைத் தொடர்ந்து, ஐஸ்லாந்தில் நடைபெற்ற பிளிட்ஸ் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான கார்போவை தோற்கடித்து, செஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
 
இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் சிறந்த 10 வீரர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
 
இந்தப் போட்டியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ரேபிட் நாக் அவுட் போட்டிகளில், அப்போது உலகின் நம்பர் வீரரான காஸ்பரோவை 13 வயதில் எதிர்கொண்டார்.
 
கார்ல்சனிடம் மோதிய முதல் போட்டியில் காஸ்பரோவால் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. இரண்டாவது போட்டியில் காஸ்பரோவிடம் தோல்வியைத் தழுவினாலும், உலக செஸ் அரங்கில் கார்ல்சனின் கிராப் கிடுகிடுவென ஏறியது.
 
கார்போ, காஸ்பரோ உடனான போட்டிகளைத் தொடர்ந்து கார்ல்சன் ஆடிய மூன்றாவது போட்டி, அவரை உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனைக்கு இட்டுச் சென்றது.
 
செர்ஜி கர்ஜாகினுக்கு பிறகு, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை கார்ல்சன் படைத்தார்.
 
கடந்த 2004இல் தனது 13 ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன அவர், 2011இல் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை பிடித்தார். 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்