ரூ.22.50 கோடிக்கு ஏலம் போன விஸ்கி - அப்படி அதில் என்ன இருக்கிறது?
திங்கள், 20 நவம்பர் 2023 (21:04 IST)
மிக அரிதாகக் கிடைக்கும் ஒரு பாட்டில் விஸ்கி இந்திய மதிப்பில் 22.5 கோடி ரூபாய்க்கு லண்டனில் ஏலம் போயுள்ளது. ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் அல்லது மது என்ற சாதனையை இது படைத்துள்ளது.
மெக்காலன் 1926 சிங்கிள் மால்ட் என்பது உலகில் அதிகம் விரும்பப்படும் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில்களில் ஒன்றாகும்.
இது கடந்த சனிக்கிழமையன்று சோத்பே ஏல நிறுவனத்தால் விற்கப்பட்டது. மதிப்பிடப்பட்ட விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அது ஏலம் போனது.
விஸ்கி ஏல மையத்தின் தலைவர், "ஒரு சிறிய துளியை" முன்பே சுவைக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
"நீங்கள் எதிர்பார்ப்பது போல் இதில் நிறைய உலர்ந்த பழங்கள், நிறைய மசாலா உள்ளன" என்று ஜானி ஃபோல் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார்.
சுமார் 60 ஆண்டுகள் டார்க் ஓக் ஷெர்ரி பெட்டிகளில் வைக்கப்பட்ட பின்னர் 1986-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 40 பாட்டில்களில் இதுவும் ஒன்று.
அந்த 40 பாட்டில்களும் விற்பனைக்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, 'தி மெக்காலன்' நிறுவனத்தின் தலைசிறந்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகு, அந்த பாட்டில்கள் ஏலம் விடப்பட்ட போதெல்லாம் மிக அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளன. இதேபோன்ற பாட்டில் 2019-ம் ஆண்டில் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
உலகக்கோப்பை: பல முகங்கள், ஒரே கனவு, எல்லாம் காணாமல் போன இரவு - ஆமதாபாத் நேரடி பதிவு
கடந்த மாதம் ஏலத்திற்கு முன்னதாக பேசிய ஜானி ஃபோல், தி மகாலன் 1926 சிங்கிள் மால்ட் மது "ஒவ்வொரு ஏலதாரரும் விற்க விரும்பக் கூடிய மற்றும் ஒவ்வொரு சேகரிப்பாளரும் சொந்தமாக வைத்திருக்க விரும்பக் கூடிய ஒரு விஸ்கி" என்றார்.
1926-ம் ஆண்டு பெட்டியில் இருந்து 40 பாட்டில்கள் வெவ்வேறு வழிகளில் லேபிள் செய்யப்பட்டதாக சோத்பே நிறுவனம் கூறியது.
இரண்டு பாட்டில்களில் லேபிள்கள் கிடையாது. அதிகபட்சம் 14 பாட்டில்கள் ஐகானிக் ஃபைன் மற்றும் அரிய லேபிள்களால் அலங்கரிக்கப்பட்டன. மேலும் 12 பாட்டில்கள் பிரபல பாப் இசைக் கலைஞர் சர் பீட்டர் பிளேக்கால் லேபிள் செய்யப்பட்டன.
சனிக்கிழமையன்று ஏலம் விடப்பட்டது உள்பட மேலும் மேலும் 12 பாட்டில்கள் - இத்தாலிய ஓவியர் வலேரியோ அடாமி கைவண்ணத்தில் அழகு பெற்றன.
1926ஆம் ஆண்டு வெளிவந்த மெக்காலன் அடாமியின் 12 பாட்டில்களில் இன்றும் எத்தனை அப்படியே உள்ளன என்பது தெரியவில்லை.
2011-ல் ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தில் ஒரு பாட்டில் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பாட்டில் திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவிட்டதாக நம்பப்படுகிறது.