கிம் ஜாங் உன்னுக்கு புதின் அளித்த ரகசிய வாக்குறுதி என்ன?
வியாழன், 21 செப்டம்பர் 2023 (21:14 IST)
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர்.
ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை வளப்படுத்துவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து புறப்படும் முன், இரு தலைவர்களும் மாதிரி துப்பாக்கிகளை அவர்களுக்குள் பரிசாக அளித்துக்கொண்டனர்.
ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற கிம் மற்றும் புதின் சந்திப்பு குறித்த படங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த சுற்றுப்பயணம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விண்வெளி மையமான வஸ்தோச்னி காஸ்மோட்ரோமை அடைவதற்கு முன், கிம் ஜாங் உன் 40 மணி நேரம் கவச ரயிலில் பயணம் செய்து மேற்குலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
இதைத் தவிர, இரு தலைவர்களுக்கும் இடையே என்ன விவாதிக்கப்பட்டது என்பதும் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயம் வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களைக் கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பே அச்சம் தெரிவித்திருந்தது, இது ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட்டது.
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்ட கிம், பாதுகாப்பு மிக்க கவச ரயில் வண்டியில் 20 மணிநேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்தார்.
கிம் ஜாங் உன்னின் ரயில் அந்த விண்வெளி மையத்தை அடைந்ததும், புதின் மிகப்பெரும் வரவேற்பு விருந்து நடத்தினார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிம் தனது நீண்ட சொகுசு ரயிலில் வந்தபோது, புதின் அந்த மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.
கேமரா ஃப்ளாஷ்களுக்கு மத்தியில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். இது குறித்த படங்கள் உடனடியாக இரு நாட்டு அரசு ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.
இரு தலைவர்களுக்கும் ஆடம்பரத்தின் சக்தி தெரியும். அதே போல் கிம் எப்போதும் விழாக்களை விரும்பும் நபராக இருக்கிறார். வட கொரியாவின் உச்ச அதிகாரம் கொண்ட தலைவர்களின் வம்சத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த தலைவராக கிம் உள்ளார்.
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வட கொரியா குறித்த நிபுணர் சாரா சன், "இந்த அதிபர் வம்சத்தைச் சுற்றி தலைமுறை தலைமுறையாக ஒரு கட்டுக்கதை உருவாக்கப்பட்டுள்ளது," என்று கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, "உள்நாட்டு மக்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது செய்தித்தாள்களைப் படிக்கும்போது, இந்த ரஷ்ய பயணம் ஒரு அற்பமான பயணமாக யாரும் உணரக்கூடாது," என்பதே உண்மை.
"பிற நாடுகளின் தலைவர்களுடனான கிம்மின் தனிப்பட்ட சந்திப்புகள், வட கொரியா ஒரு முக்கியமான உலகளாவிய நாடு என்பதைப் போல் தோன்றச் செய்கின்றன."
அவரைப் பொறுத்தவரை, "இயற்கையாகவே, பொருளாதாரத் தடைகள் இருநாடுகளின் மீதும் இறுக்கமாக உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை. அந்த இலக்கை அடைய இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை அளிக்கும். அதே நேரத்தில் வட கொரிய அரசுக்கு, இது மிகப்பெரும் வருமானத்தை ஈட்டுவதற்கும், கிம் உலகளாவிய தலைவர் என்பதற்கு ஆதாரங்களை உருவாக்குவதற்கும் உதவும்," என்கிறார்.
இந்த இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, வடகொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அதிபர் இல்லாத நேரத்தில் முதன்முறையாக இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
"இந்த சந்திப்பு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட அரசுகளை ஒன்றிணைத்துள்ளது," என்று சியோலில் உள்ள எவ்ஹா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான லீஃப்-எரிக் அஸ்லி கூறினார்.
கிம்மை வரவேற்க ரஷ்ய அதிபர் புதின் நாட்டின் கிழக்குப் பகுதிக்குப் பயணம் செய்து, அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் இந்த ஆடம்பரமான நிகழ்ச்சியைத் தவிர, இந்த சந்திப்பின் போது எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்தச் சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
சியோலில் உள்ள கூக்மின் பல்கலைக்கழகத்தில் வட கொரியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஃபியோடர் டெர்டிட்ஸ்கி, "இதுவரை பொதுவில் அதிகம் சாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது," என்கிறார்.
"இந்தப் பயணத்தில் இரண்டு வகையான நிகழ்வுகள் உள்ளன - ஒன்று ஆடம்பரமான மற்றும் பிரமாண்டமான வரவேற்பு. இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று மூடிய கதவுகளுக்குப் பின்னால் உள்ள ஒப்பந்தங்கள். இது முக்கியமானதாக இருக்கும்."
யுக்ரேனில் ரஷ்யா போர் புரிவதற்கு வட கொரியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று மேற்குலக நாடுகளில் கவலைகளை எழுப்பிய எந்த ஆயுத ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டதாக இதுவரை எந்த தடயமும் இல்லை.
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த பேச்சு நடைபெற்றதாக மேற்குலக நாடுகள் கூறியுள்ளளன.
வட கொரியாவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் செயற்கைக்கோள் நோக்கங்களுக்காக ரஷ்யா உதவ முடியும் என்று புதின் கூறியுள்ளார் என்பது தான் இதுவரை அறியப்பட்ட தகவலாக உள்ளது.
கிம் ஜாங் உன்னை வரவேற்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் சில விஷயங்களைத் தெளிவாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மாஸ்கோவில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள விண்வெளி மையத்தை அடைய புதினும், வடகொரியாவிலிருந்து அந்த இடத்தை அடைய கிம்மும் நீண்ட தூரம் பயணித்தனர் என்பதே உலக நாடுகளுக்கு அந்தத் தகவல்களை தெளிவுபடுத்தியுள்ளன.
ஆனால் விண்வெளி மையத்தில் நடந்த அந்த சந்திப்பு புதினுக்கு ஒரு முக்கியமான பிம்பத்தை உருவாக்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிபர் புதினைச் சந்தித்த பின் ரஷ்யாவின் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று வடகொரிய அதிபர் பார்வையிட்டு வருகிறார்.
முதலாவதாக, விண்வெளி திட்டங்களில் வடகொரியாவுக்கு ரஷ்யா உதவுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.
இந்த ஆண்டு வடகொரியா தனது இரண்டு உளவு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பத் தவறிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், அந்நாட்டின் தொழில்நுட்பம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதே ஆகும். இதில் ரஷ்யாவின் உதவி வடகொரியாவுக்குத் தேவைப்படுகிறது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, வட கொரியா விண்வெளியில் உளவு செயற்கைக்கோளை நிறுவ உதவுவது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களைத் தொடர உதவுவதில் இருந்து முழுக்க முழுக்க வேறுபட்டது.
ஆனால், வடகொரியாவுக்கு ரஷ்யா தற்போது என்ன வாக்குறுதியை அளித்துள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் பிரச்சனை.
வடகொரிய அதிபர் ரஷ்ய அதிபருடன் பேச்சு நடத்திய காட்சிகள் இருநாட்டு ஊடகங்களில் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்பட்டன.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியாவிடம் உள்ளது. இது கோட்பாட்டளவில் அமெரிக்காவை அடைந்து அங்கே தாக்குதல் நடத்த முடியும்.
இருப்பினும், தற்போது இது போன்ற தாக்குதலை நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் வட கொரியா வான்வழியாக அழிக்கப்படாமல் பாதுகாப்பாகச் சென்று தாக்கும் திறன்கொண்ட ஏவுகணையைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் உருவாக்கவில்லை.
அதேசமயம், ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே தொழில்நுட்பத்துடன் தங்கள் ஏவுகணைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்திருக்கின்றன.
இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்கினால், அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளாகலாம்.
ரஷ்ய விண்வெளி மையத்தில் நடந்த இந்த சந்திப்பு, "புதின் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை கேலி செய்வது போல் உள்ளது," என்று பேராசிரியர் ஈஸ்லி கூறுகிறார்.
"வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்க ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு இது மற்றொரு எச்சரிக்கை மணி,” என்றார் அவர்.
ஆனால் ரஷ்யா அதன் அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்கிறதா அல்லது வட கொரியாவின் ஆயுதங்களைப் பெறுவதை விட இது அதிகம் என்று நினைக்கிறதா என்பதில் கணிசமான சந்தேகம் உள்ளது.
டெர்டிட்ஸ்கி பேசிய போது, "செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான புதினின் அறிக்கையும் மிகவும் கண்டிப்பானதாகத் தெரிகிறது. ஏனெனில் அவர் உதவி வழங்குவதாக எந்த வெளிப்படையான வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஆனால் அவர் இதையும் பரிசீலிக்கலாம் என்று கூறுகிறார்," என்றார்.
இரு தலைவர்களின் சந்திப்பின் போது உண்மையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது.
தென் கொரியாவின் மதிப்பீடுகளின்படி, தற்போதைய ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய அனைத்து மகிழ்ச்சியான தகவல்களையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது.
வடகொரியா தனது வர்த்தக வருமானத்தில் 95% சீனாவையே சார்ந்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், "இதன் காரணமாக, 2019 இல் நடந்த கூட்டம் முடிவில்லாததாக இருந்ததால், இந்த சந்திப்பில் ஏதேனும் உறுதியான தீர்வு கிடைக்குமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது," என்றார்.
இரு தலைவர்களும் இதற்கு முன்பு கடைசியாக சந்தித்துக் கொண்டதை அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு நடந்து நான்கு வருடங்கள் ஆகிறது. ஆனால் கிம்மின் அந்த அரிதான ஆச்சரியமூட்டும் பயணத்தை யாரும் மறந்துவிடக்கூடாது.
கடந்த நான்கு ஆண்டுகளில் கிம்மின் முதல் ரஷ்ய பயணம் இதுவாகும். ஏனெனில் வட கொரியாவும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்ட பின் பொது முடக்கம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள், புதின் கிம்முக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கவேண்டும் என உறுதியாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
சீனா மற்றும் தென் கொரியா தலைவர்கள் ஏற்கனவே விளாடிவோஸ்டாக்கில் பங்கேற்ற கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தின் போதே கிம்மை புதின் சந்தித்திருக்கலாம்.
அதற்கு பதிலாக, அவர் கிம்முக்கு சிறப்பு கவனம் அளிக்க முடிவு செய்து, முழு மரியாதையுடன், சிவப்பு கம்பளம் விரித்து, ஆடம்பரமான இரவு உணவு அளித்து இந்த வரவேற்பை அளித்தது ஏன் என்ற கேள்வியைத் தாண்டி, இதற்காக புதின் இவ்வளவு தொலைவு பயணம் செய்துள்ளார் என்பது அவருக்கு புதின் அளிக்கும் கவனத்தையே காட்டுகிறது.
டெர்டிட்ஸ்கியின் கூற்றுப்படி, “இது கிம் மீதான மரியாதையைக் காட்டுவதாகும். இது கிம் தன்னை முக்கியமானவராக உணரக்கூடிய ஒரு உணர்வு.
ஆனால் இது மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்புவதோடு என்ன நடக்கிறதென்றே அவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
ஆனால் இந்த உறவில், இரு தரப்பினரும் இறுதியில் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அவரைப் பொறுத்தவரை, “கிம் மற்றும் புதின் ஆகிய இருவரும் குழப்பத்தில் மூழ்குவதில் வல்லவர்கள். மீண்டும் ஒருமுறை, அவர்களது வார்த்தைகளை விட உறுதியான செயல்களைப் பார்ப்பது முக்கியம்," என்றே தெரியவருகிறது.