ரோஜர் ஃபெடரரை திணறடித்ததன் ரகசியம் என்ன? - விளக்குகிறார் இந்திய இளம் வீரர் சுமித் நாகல்
சனி, 31 ஆகஸ்ட் 2019 (21:25 IST)
சுரியான்ஷி பாண்டே
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரின், முதல் சுற்று போட்டியில் ஜாம்பவான் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை முதல் செட்டில் தோற்கடித்து அதிர்ச்சியை அளித்தார் இந்திய இளம் வீரர் சுமித் நாகல்.
முதல் சுற்றை 6-4 என சுமித் வெல்ல, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தனது சிறப்பான சர்வீஸ் மற்றும் எதிராட்டத்தால் நாகல் முதல் செட்டை வென்றார்.
இறுதியில் தனது அனுபவத்தால் அடுத்த 3 செட்களையும் வென்று போட்டியை வென்றார் ரோஜர் ஃபெடரர். 22 வயதான சுமித் நாகல் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் 190-வது இடத்தில் உள்ளார்.
சுமித் நாகல் பிபிசியிக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு:
கேள்வி: ரோஜர் ஃபெடரருடன் விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: டென்னிஸின் கடவுள் என்று கூறப்படுவர் ரோஜர் ஃபெடரர். என்னைப் பொறுத்தவரை டென்னிஸில் அவரிடம் எந்த பலவீனமும் இல்லை. அவர் ஆட்டம் செல்லும் போக்கிலே சென்று அழுத்தத்தை எதிராக ஆடுபவர்கள் மீது துரிதமாக திருப்பிவிடுவார். அதுவே அவரது பலம். அவருடைய ஆட்டமுறையில் பல வேறுபாடுகள் இருக்கும்.
கேள்வி: ரோஜர் ஃபெடரருடன் உலகின் மிகப்பெரிய டென்னிஸ் அரங்கமான ஆர்துர் அரங்கத்தில் ஆடிய அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். ஆர்துர் அரங்கம் 60,000 பேர் அமரக்கூடிய அளவிலான, உலகிலேயே மிகப்பெரிய அரங்கம். நான் மைதானத்திற்குள் நுழையும்போது, பெரியளவில் உற்சாகப்படுத்தினர். நான் முதல்முறையாக இதை சந்தித்தேன்.
கேள்வி: ரோஜர் ஃபெடரருடன் முதல் செட்டில் வெற்றிபெற்றவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?
பதில்: நான் மைதானத்திற்குள் நுழைந்தபோது மிகவும் பதற்றமாக இருந்தேன். அவ்வளவு மக்களுக்கு நடுவில் ஆடும்போது எந்த வீரருக்கும் அப்படிதான் இருக்கும். என்னை சுற்றியுள்ள நல்ல ஆற்றலை மட்டும் உணர முயற்சித்தேன். முதல் செட்டில் சீராக ஆடுவதற்கான வாய்ப்பை ரோஜர் ஃபெடரருக்கு நான் வழங்கவில்லை. நான் நல்ல ஃபார்மில் இருந்தேன். நன்றாக விளையாடினேன்.
கேள்வி: உங்களுடைய சிறுவயது பற்றி சொல்லுங்கள். நீங்கள் எப்போது டென்னிஸ் விளையாட தொடங்கினீர்கள்?
பதில்: நான் ஹரியாணாவில் இருந்தபோது டென்னிஸ் ஆட தொடங்கவில்லை. என்னுடைய ஏழரை வயதில் டெல்லி வந்தவுடன் தான் டென்னிஸ் ஆட தொடங்கினேன். நான் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த டிடிஏ டென்னிஸ் மைதானத்திற்கு செல்வேன்.
சிறுவயதில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. என் அப்பாதான் டென்னிஸ் விளையாடி பார்க்க சொன்னார். ஆனால், விளையாட தொடங்கியவுடன் இதிலேயே மூழ்கிப் போனேன்.
கேள்வி: மகேஷ் பூபதி உங்களுடைய ஆசிரியர் என்று கூறினீர்களே? உங்களுடைய அம்மாவும் அதை தான் கூறினார். அவரை எப்படி உங்களுக்கு தெரியும்?
பதில்: 2007 டிசம்பரில் டென்னிஸ் விளையாடும் இளம் வீரர்களைத் தேர்வு செய்ய மகேஷ் பூபதி டெல்லிக்கு வந்தார். அந்த பயிற்சியில் நானும் தேர்வானேன். அதன்பிறகு அவருடன் பெங்களூர் சென்றேன். அங்கே இரண்டு வருடம் பயிற்சி மேற்கொண்டேன். இரண்டு ஆண்டுக்கு பிறகு பயிற்சி முடிந்ததும் மீண்டும் டெல்லி வர வேண்டிய சூழ்நிலை வந்தது.
அதன் பின் அதிக பணம் தேவைப்பட்டதால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தினேன். இரண்டு மூன்று மாதங்கள் கழித்து மகேஷ் பூபதியிடம் இருந்து மீண்டும் பயிற்சியைத் தொடங்க அழைப்பு வந்தது. அதன்பின் மீண்டும் பெங்களூர் சென்றேன். பின் அங்கிருந்து கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்றேன். என்னுடைய பயணத்தின்போது என்னுடைய பயணச்செலவு முதல் தங்கும் செலவு வரை அவரே பார்த்து கொண்டார். அதனால் தான் அவர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்.
கேள்வி: இப்போது விராட் கோலி உங்களுக்கு செலவழிக்கிறார் என கேள்விபட்டோம் உண்மையா?
பதில்: தொடக்க காலத்தில் என்னால் நிறைய தொடர்களில் பங்கேற்ற முடியவில்லை. அதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம். எனக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்கவில்லை. என்னுடைய சிறு வயதில் 5 ஏடிபி தொடரில் மட்டுமே ஆடியிருப்பேன். அதற்கு முன் 12 ஆட்டங்கள் ஆடியிருப்பேன். விராட் கோலி, விராட் கோலி ஃபவுண்டேஷன் மூலம் என்னை தேர்வு செய்தார். இப்போது நானே எனக்காக செலவு செய்கிறேன்.
கேள்வி: மைதானத்திற்கு வெளியே எவ்வாறு இருப்பார் சுமித் நாகல்?
பதில்: நான் எங்கும் சரியான நேரத்தில் சென்றுவிடுவேன். எனக்கு தாமதமாக செல்வது பிடிக்காது. அது என்னுடைய பழக்கம். ஆனால் எனக்கு கோபம் அதிகமாக வரும். ஓரிடத்தில் இருக்க மாட்டேன். சுறுசுறுப்பாக இருக்க விரும்புவேன்; எனக்கு கதை பேசுவது பிடிக்கும்.
கேள்வி: நீங்கள் விரும்பும் விளையாட்டு வீரர் யார்?
பதில்: டென்னிஸில் எனக்கு ரஃபேல் நாடாலை பிடிக்கும். கிரிக்கெட்டில் விராட் கோலியை பிடிக்கும். மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் வலிமையான தாக்குதல் ஆட்டம் பிடிக்கும்.